நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார். அதே நேரத்தில் 70 வயது தொட்ட சீனியர் நடிகராகவும் உள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கிய நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்தார். ஆனால் இப்போது அரசியல்வாதியாக கமல்ஹாசன் இப்போது திமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார்.
இந்நிலையில் மிக விரைவில் நடிகர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக பார்லிமெண்டுக்குள் நுழைய இருக்கிறார். பல ஆண்டுகளாக தனி ஒருவராக அரசியல் களத்தில் போராடிய கமல் தன்னால் எம்எல்ஏ கூட ஆக முடியாது என்ற நிலையில் திமுக ஆதரவால் இப்போது ராஜ்யசபா எம்பியாகி இருக்கிறார்.
சமீபத்தில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய கமல், அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாராட்டி பேசினார். அப்போது, ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறினார்.
இது தற்போது கர்நாடகாவில் பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை கண்டனத்தை தெரிவித்துள்ளனர். கன்னட அமைப்புகள் பல, தக்லைஃப் பட பேனர்களை போஸ்டர்களை கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கர்நாடகா கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து கமல் கூறுகையில், மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதியே இல்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தடலாடியாக துணிச்சலாக கேரளாவில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கமலுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனின் நீண்ட கால நண்பர் நடிகர் ரஜினிகாந்த் இதில் யாருக்கு ஆதரவாக பேசப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் கன்னட மொழி பேசும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் கன்னட மக்களுக்கு ஆதரவாக நிற்பாரா, அல்லது தமிழ் சினிமா ரசிகர்கள் தந்த ஆதரவால் வெற்றியின் உச்சம் தொட்ட அவர், சக நடிகர் கமலுக்கு ஆதரவு தருவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





