கலைத்துறையை பொருத்தவரை, ஆற்றல் மிக்க கலைஞர்களுக்கு தரப்படும் அங்கீகாரமும், அடையாளமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் சிறந்த நடிகராக இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது இதுவரை வழங்கப்படவில்லை என்றால் அது நம்ப முடிகிறதா என்றால் அதுதான் உண்மை.
துவக்கத்தில், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நாடகங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். அப்போது விசி கணேசன் என்று அழைக்கப்பட்ட அவர், வீரபாண்டிய கட்டபொம்மனாக கர்ஜிப்பதை கேட்கவும், அவரது ஆவேச நடிப்பை பார்க்கவும் நாடக கொட்டகைகளில் ரசிகர் கூட்டம் அலைமோதும். அதேபோல் திரையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு, எப்போதுமே வேற லெவலில் இருக்கும்.
தேவர்மகன் படத்தில் சிவாஜி கணேசன் கமல்ஹாசனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். அந்த கேரக்டருக்கு மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதை வாங்க வேண்டாம் என்று கமல்ஹாசனே, சிவாஜி கணேசனிடம் கூறி வாங்க விடாமல் செய்திருக்கிறார். காரணம், விருதுகளால் தனக்கு பெருமையின்றி, தன்னால் விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது நாடறிந்த விஷயம்.
எனினும் பிலிம்பேர் போன்ற சில சினிமா பத்திரிகை அமைப்புகள், ஆண்டுதோறும் சிறந்த படங்களை, சிறந்த நடிகர்களை, சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று, ஐதராபாத்தில் தென்னிந்திய அளவில் 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த திரைப்படம் சித்தா, சிறந்த இயக்குனர் – அருண்குமார் (சித்தா), சிறந்த படம் ( விமர்சகர்கள் விருது) – விடுதலை பாகம் 1, சிறந்த நடிகர் – விக்ரம் ( பொன்னியின் செல்வன் 2) , சிறந்த நடிகர் ( விமர்சகர்கள் விருது) – சித்தார்த் ( சித்தா), சிறந்த நடிகை – நிமிஷா சஜயன் ( சித்தா), சிறந்த நடிகையர் ( விமர்சகர் விருது) ஐஸ்வர்யா ராஜேஷ் ( பர்ஹானா) அபர்ணா தாஸ் ( டாடா)
சிறந்த துணை நடிகர் – பஹத் பாசில் ( மாமன்னன்) சிறந்த துணை நடிகை – அஞ்சலி நாயர் ( சித்தா) சிறந்த இசை ஆல்பம் – திபு நினன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் ( சித்தா) சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் அகநக… ( பொன்னியின் செல்வன் 2) சிறந்த பாடகர் – ஹரிச்சரண் சின்னஞ்சிறு நிலவே ( பொன்னியின் செல்வன் 2) சிறந்த பாடகி – கார்த்திகா வைத்தியநாதன் கண்கள் ஏதோ… ( சித்தா) சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன் ( பொன்னியின் செல்வன் 2) சிறந்த கலை வடிவமைப்பாளர் – தோட்டாதரணி ( பொன்னியின் செல்வன் 2) என விருதுகள் வழங்கப்பட்டன. சித்தா, பொன்னியின் செல்வன் படங்களே அதிக விருதுகளை வென்றுள்ளன.





