தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசனும் இருக்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் இணைது சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். எண்பதுகளில் அந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படங்களில் பெரும்பாலும் ஹீரோவாக கமல்ஹாசனே இருப்பார்.
நெகட்டிவ் கதாபாத்திரம் அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களிலேயே ரஜினிகாந்த் வருவார். இருவரும் இணைந்து நடித்த 16 வயதினிலே திரைப்படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், சப்பாணி என்னும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக வருவார் கமல்ஹாசன்.
இதேபோன்று பரட்டை என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து மிரட்டி இருப்பார் ரஜினிகாந்த். காலத்துக்கும் நின்று பேசும் அழியாத காவியமாக 16 வயதினிலே இருந்து வருகிறது. இதேபோன்று அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
தொடர்ந்து இருவரும் தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்தனர். இதில் தனக்கே உண்டான ஸ்டைல் மூலம், புகழில் உச்சத்திற்கு சென்றார் ரஜினிகாந்த். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்குகளில் சக்கை போடு போட்டன. அதேபோன்று ரஜினிக்கு என தனி ரசிகர் பட்டாளமும் திரள ஆரம்பித்தது. சூப்பர் ஸ்டார் பட்டமும் அவரை தேடி வந்தது.
இதேபோன்று கமல்ஹாசனும் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து உலகநாயகன் அந்தஸ்தை பெற்றார். இருவரும் தற்போது வரை, ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். இப்படியான சூழலில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனை கமல்ஹாசனும் உறுதி செய்தார். லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கப் போவதாக பேசினார்கள்.
ஆனால் அதனை ரஜினிகாந்த் உறுதிப்படுத்தவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். இப்படியான சூழலில் ரஜினி கமல் இணையும் திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மணிரத்னம் இந்த திரைப்படத்தை இயக்கலாம் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. கார்த்திக் சுப்புராஜ், சங்கர் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். நாயகனாக தற்போது பட்டையை கிளப்பி வரும் பிரதிப் ரங்கநாதனும் இந்த லிஸ்டில் இருக்கிறார். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியவரும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





