தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம் நிறுவனம். குறிப்பாக கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பெரும்பாலான வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன். இவர் வடபழனியில் வசித்து வந்தார்.
கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்ற ஏவிஎம் சரவணன் 86 வயதான நிலையில் மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முரட்டுக்காளை படம்தான் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
ஏவிஎம் தயாரிப்பு படங்கள் என்றாலே அது ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமாக படங்களாக தான் இருக்கும். ரஜினி கமல் போன்ற பல நட்சத்திர நடிகர்களின் படங்களை தயாரித்தவர் ஏவிஎம் சரவணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் அவர் தனது 85வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மறுநாள் மறைந்தது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நேரில் வந்த நடிகர் ரஜினிகாந்த், சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது, மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் தான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். பத்து நிமிடங்கள் அவருடன் பேசினால் அதில் அப்பச்சி அப்பச்சி என்று அவருடைய தந்தையை தான் அவர் நினைவுபடுத்தி பேசுவார்.
என் மீது நிறைய அன்பு வைத்திருந்தார். என்னுடைய நலம் விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் எனக்கு துணை நின்றவர். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் 9 படங்களில் நடித்துள்ளேன். அந்த 9 படங்களும் பெரிய ஹிட் படங்களாக இருந்தன. கடந்த 1980களில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான முரட்டுக்காளை படம் தமிழகத்தில் மிகப் பிரமாண்டமான வசூலை குவித்தது.
2000ம் ஆண்டில் வெளிவந்த சிவாஜி படம் மிகப்பெரிய பிரமாண்டமான படமாக இருந்தது. 2020களில் மிகப் பிரமாண்டமான ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய மறைவு என் மனதை மிகவும் பாதிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறியிருக்கிறார்.





