தமிழ் சினிமாவில் நடிகவேள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் எம். ஆர் ராதா. பகுத்தறிவு பேசினாலும், அவரது நடிப்பை சகல தரப்பு ரசிகர்களும் ரசித்தனர். எம்ஆர் ராதா நடித்த படங்களிலும், நாடகங்களிலும் பகுத்தறிவு கருத்துகளை மட்டுமின்றி, வாழ்க்கை யதார்த்தங்களையும் தன் வசனங்களால் மக்களுக்கு புரிய வைத்தார்.
எம்ஆர் ராதா வில்லத்தனமாகவும் நடிப்பார். காமெடி காட்சிகளிலும் பட்டையை கிளப்புவார். குணச்சித்திர வேடங்களிலும் அவரது தனித்துவமான நடிப்பில் நவரசஙகளையும் வெளிப்படுத்துவார். எம்ஆர் ராதாவின் பிள்ளைகள்தான் தமிழ் சினிமா வாரிசுகளாக ராதாரவி, ராதிகா, நிரோஷா வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை மனம் திறந்த பாராட்டி இருக்கிறார். அதில், லாரன்ஸ் நடிப்பை பார்த்து பிரமித்து போனதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், மற்றொரு நடிகரான எஸ்ஜே சூர்யாவை நடிகவேள் என பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்.
ரஜினிகாந்த் எழுதிய வாழ்த்து மடலில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு குறிஞ்சி மலர். லாரன்ஸ் இப்படியும் நடிப்பாரா என்ற பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார். எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரையுலகில் நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து தந்து அசத்தி இருக்கிறார்.
திருவின் கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டை காட்சிகள் அபாரம் என்று பாராட்டிய ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு எனவும் புகழ்ந்து இருக்கிறார்.
படத்தின் இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ள ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஐ யம் பிரவுட் ஆப் யூ என குறிப்பிட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் இப்படி பாராட்டி இருப்பதால் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜேசூர்யா உள்பட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.





