மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்தது. நீடித்த கனமழையால், சென்னை மாநகரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழைவெள்ளத்தால் வீடுகள் சூழப்பட்டன. ஆறடி முதல் 10 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததால், வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியவில்லை.
மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மேயர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என உதவிகளை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
அரசு தரப்பில் மட்டுமின்றி தன்னார்வலர்களும், பொது சேவை அமைப்புகளும் இதில் கைகோர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றன. விஜய், அஜீத் ரசிகர்களும் களத்தில் இறங்கி பணி செய்து வருகின்றனர், கேபிஒய் பாலா, தனது சொந்த பணத்தில், 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் வீதம் வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள், லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையிலேயே பலரும் உணவு பொருட்கள், பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் பாட்டில்கள்,. உணவு பொட்டலங்களை பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
மழைவெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் அமீர்கான், விஷ்ணு விஷால், நடிகை நமீதா உள்ளிட்ட பலரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் அப்படியே இருப்பதால், மக்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்கவில்லை. மின்சாரம், குடிநீர் போன்றவை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னையில் போயஸ்கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் வீடு உள்ள பகுதிகளும் மழைவெள்ளம் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. போயஸ்கார்டனில் ரஜினி வீட்டின் முன்பகுதி, நுழைவாயில் கேட் உட்புறம், காம்பவுண்ட் சுவர் என அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவுக்கு மழைவெள்ளமாக தேங்கியிருப்பது இன்று வெளியான வீடியோவில் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.





