இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்த திரைப்படம் வாழை. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தனது சொந்த ஊர் மக்களுக்கு நிகழ்ந்த ஒரு துயரத்தை மையமாக வைத்து தான் இந்த திரைப்படத்தின் கதையை மாரி செல்வராஜ் எழுதியிருக்கிறார். சிவனணைந்தன் என்னும் சிறுவன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
வாழைக்காயை சுமக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அதன் பின்னால் இருக்கும் முதலாளி துவத்தையும், சிறுவயதில் வேலைக்குச் செல்லும் மாணவர்களின் கஷ்டத்தையும் ஒருசேரக் காட்டி இருந்து அந்த கிராமத்திலேயே நம்மை பயணிக்க வைத்திருந்தார் மாரி செல்வராஜ்.
குறிப்பாக கிளைமாக்ஸில் அந்த விபத்து நடைபெறும் காட்சி இங்கு பலரது மனதையும் உலுக்கியது. இப்படி வாழைப்படத்தில் சொல்ல சொல்ல ஏராளமான விஷயங்கள் இருந்ததால், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. ஆனால் ஒரு சிலர் இதனை மிகை மிஞ்சி கொண்டாடுவதாக கூறி வந்தார்கள்.
வாழை திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து கூறி வந்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலினும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். ஆயிரம் வாழைத்தார்களை நெஞ்சில் ஏற்றி வைத்துவிட்டார் மாரி என்றும் அவர் உருக்கமாக பேசியிருந்தார். இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழை திரைப்படத்தை வாழ்த்தி கடிதம் எழுதிட்டு இருந்தார்.
இந்த நிலையில், வாழை திரைப்படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அப்போது, இறக்கை முளைத்த பன்றி குட்டி சிலையை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு பரிசாக அளித்திருப்பதையும் குறிப்பிட்டு இயக்குனர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.





