பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது. இந்த சமயத்தில்தான் உள்ளே வந்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்னும் சுவாரசியமான திரைப்படத்தை இயக்கியவர் தான் அவர்.
அந்தத் திரைப்படத்தின் இரண்டு மூன்று காட்சிகளில் ரஜினிகாந்தின் ரெஃபரன்ஸ் இருக்கும். படமும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. இதனைப் பார்த்துவிட்டு, உற்சாகமடைந்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து தனக்கு ஏற்ற கதையை ஒன்றை தயாராக்க கூறினார்.
இயக்குனரும் அதற்கான வேலைகளில் ஈடுபட, அவர் எடுத்து வந்த கதை ரஜினிகாந்த்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமான முறையில் எழுதப்பட்ட அந்தக் கதையை சிம்புவிடம் கூறினார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.
இது நடிகருக்கும் மிகவும் பிடித்துப் போனதால், அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பமாகின. கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் இதற்கே ஆறு மாதங்களுக்கு மேலானது.
சிம்புவும் இதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அவருக்காக காத்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், இதற்கான அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. இப்படியான சூழலில், திடீரென தக் லைப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க சென்று விட்டார். படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறியதால் அவரது கதாபாத்திரம் சிம்புவுக்கு கிடைத்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் சிம்புவின் 48வது திரைப்படம் குறித்த தகவல் மட்டும் வெளியாகவே இல்லை. இப்படியான சூழலில் தான், படத்தின் தயாரிப்பில் இருந்து ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது. அதிக பட்ஜெட் காரணமாக இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, connekkt என்னும் நிறுவனம், சிம்பு தேசிங்கு பெரியசாமி படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைடுத்து படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





