தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயனை அமரன் படம் பெரிய அளவுக்கு மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் ரூ. 55 கோடி வரை உயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. திறமையும், தகுதியும், உழைப்பும் இருந்தால் அதற்கான உயரங்கள் தானாகவே அமையும் என்பதற்கு சிவகார்த்திகேயன் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கி நடித்து, ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றிருக்கிறார். சாய்பல்லவி நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கிறது. அவரும் தன் சம்பளத்தை இப்போது ரூ. 6 கோடியாக உயர்த்தி விட்டார்.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களில் காதல், காமெடி, சென்டிமென்ட் என ஜாலியான படங்களாகவே அவை பெரும்பாலும் இருந்திருக்கின்றன. ஏனெனில் இளமையான நாயகன் சிவகார்த்திகேயனுக்கு அதிகளவில் காதல் சார்ந்த கதைக்களம் படங்களே அமைந்தன.
அதிலும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மனம் கொத்திப் பறவை, ரேமோ என பல படங்கள் காதலும், காமெடியும் நிறைந்த ஜாலியான படங்களாகவே இருந்தன. ஆனால் அமரன் படம் முழுக்க முழுக்க வேறு ஒரு ஜானரில், ஆக்சன் படமாக ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதுகுறித்து அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், அமரன் படத்தின் ஸ்கிரிப்ட்டை ரெடி செய்த போது பல காமெடி காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் எடிட் செய்து முடித்த பிறகுதான் அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்த கதை, மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தோன்றியது. அதனால் அந்த காமெடி காட்சிகளை உடனடியாக நீக்கிவிட்டேன்.
நான் அப்படி செய்ததால் தான் முகுந்த் வரதராஜனின் பிரச்னைகள், அவரது குடும்பத்தினரின் துயரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தது. அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால் தான் சிவகார்த்திகேயனும் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இல்லையென்றால் அவருடைய வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றாக தான் இருந்திருக்கும் என்று ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் யோசிக்கும் இவரை போன்ற இயக்குனர்களுக்கு மத்தியில், கதையே இல்லாமல் படம் எடுக்கும் இயக்குனர்களும் சிலர் இருக்கின்றனர் என்று ரசிகர்கள் கூறி வருத்தப்படுகின்றனர்.





