தெலுங்கில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்தவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பான் இந்தியா ஸ்டாராக அவர் மாறிவிட்டார். சலார், கல்கி 2989ஏடி படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளிவர உள்ளது.
தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க கமிட் ஆகிவரும் பிரபாஸ், இப்போது வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. 45 வயது கடந்தும் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. இதனால் அவரது திருமணம் குறித்த பல வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன.
குறிப்பாக பாகுபலி படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக தேவசேனா கேரக்டரில் நடித்த அனுஷ்காவை அவர் காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் அடிக்கடி தகவல் பரவுகிறது. ஆனால் அதை இருவருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சில வாரங்களுக்கு முன், இதுகுறித்து பேசிய நடிகர் பிரபாஸின் அம்மா, பிரபாஸின் நண்பர் ஒருவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்தது. அதனால் தன்னுடைய திருமணமும் அதுபோன்ற சிக்கலை சந்தித்தால் என்ன செய்வது என்ற மனநிலையில்தான், பிரபாஸ் திருமணத்தில் ஆர்வமின்றி இருப்பதாக கூறியிருந்தார். இதுவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் நடிகர் ராம்சரண், நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். அப்போது பிரபாஸ் திருமணம் குறித்து பாலகிருஷ்ணா, நடிகர் ராம்சரணிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகர் ராம்சரண், பிரபாஸின் மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில், கானபவரம் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இவ்வளவு புள்ளிவிவரமாக ராம்சரண் சொல்வதால், பிரபாஸ் திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





