தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியை பெற்ற படங்களாக இருந்தன. குறிப்பாக உள்ளத்தை அள்ளித் தா, காதலா காதலா, அருணாசலம், சுந்தரபுருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, நினைத்தேன் வந்தாய், ராசி, செங்கோட்டை என பல படங்களை சொல்லலாம்.
ஒரு கட்டத்துக்கு பிறகு இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு ரம்பா, கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். கணவர், பிள்ளைகள் என பல ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட ரம்பாவுக்கு, பலமுறை படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.
இப்போதும் ரம்பாவுடன் நட்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சிலர் தமிழ் படங்களில் நடிக்கவும், தமிழ் வெப் சீரியல்களில் நடிக்கவும். டிவியில் முன்னணி தொடர்களிலும் நடிக்க அழைப்பு விடுத்த நிலையில், ரம்பா நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில் பிள்ளைகளின் எதிர்காலமே தனக்கு முக்கியம் என்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமாருக்கும், நடிகை தமன்னாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ரம்பாவை விட்டு பிரியும் அவரது கணவர் இந்திரகுமார், தமன்னாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல் வைரலானது. மேலும் ஸ்ரீலங்காவில் புதிதாக துவங்கப்பட்ட இந்திரகுமாரின் மேஜிக் ஹோம் என்ற புதிய ஷோரூமை நடிகை தமன்னா திறந்து வைத்தார். அப்போதுதான் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த சூழலில் கனடாவில் இருந்து இன்று சென்னைக்கு வந்த நடிகை ரம்பா, தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர், தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு இருந்த பிரமேலதா விஜயகாந்துக்கும் ஆறுதல் கூறினார். அப்போது ரம்பாவின் கணவர் இந்திரகுமாரும் உடனிருந்தார். இதன் மூலம் தமன்னா விவகாரம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரம்பா, கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு என்னால் அப்போது நேரில் வர முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு செல்வார் என எதிர்பார்க்கவில்லை. மிக நல்ல மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். உயிரோடு அவர் இருக்கும்போது வந்து பார்க்கவில்லையே என்ற கவலை, காலம் முழுவதும் எனக்கு இருக்கும். என் கணவருக்கும், கேப்டனை மிகவும் பிடிக்கும். விஜயகாந்த் எப்போதும் நம் மனங்களில் வாழ்ந்துக்கொண்டே இருப்பார், என்றார்.





