நடிகை நதியா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர். பூவே பூச்சூடவா, மந்திரப்புன்னகை, சின்னதம்பி பெரியதம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் போன்ற பல படங்களில் நடித்தவர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகியவர், பல ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி அம்மாவாக, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நதியா நடித்து வருகிறார். எனினும் அவர் ஆரம்ப காலத்தில் எப்படி குறிப்பிட்ட தனக்கு தகுதியான நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தாரோ, இப்போதும் அதுபோல் தனது வயதுக்கேற்ப, தன்னை மெச்சூரிட்டியாக காட்டக் கூடிய கேரடர்களை தேர்வு செய்துதான் நடித்து வருகிறார். நதியா இன்னும் அதே இளமை தோற்றத்தில் இருப்பதால், ஹீரோ ஹீரோயின்களுக்கு அக்கா கேரக்டரில் கூட நடிக்கிறார்.
அதே போல் கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்தான் நடிகை ரம்யாகிருஷ்ணன். முதல் வசந்தம் படத்தில், மணிவண்ணன் இயக்கத்தில் ரம்யாகிருஷ்ணன் அறிமுகமானார். முதல் படத்திலேயே, இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் தந்திருந்தார் மணிவண்ணன். அதனால் ரம்யாகிருஷ்ணன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார்.
பேர் சொல்லும் பிள்ளை, படிக்காதவன் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ரம்யாகிருஷ்ணன் ஒரு கட்டத்துக்கு பிறகு இரண்டாம் நிலை கதாநாயகன்களுக்கு ஹீரோயினாக நடிக்கத் துவங்கினார். தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடித்தார். தெலுங்கு பட இயக்குநர் வம்சியை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
ரஜினிகாந்தை எதிர்க்கும் வில்லியாக நீலாம்பரி கேரக்டரில் படையப்பா படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ரம்யாகிருஷ்ணன். அதன்பிறகு பல படங்களில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக தரப்பட்டது. பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம். அவரைத் தவிர யார் நடித்திருந்தாலும் அந்த கேரக்டர் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது.
இந்நிலையில், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நெகடிவ் ரோலில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க கமிட் ஆனது நடிகை நதியா தான். ஆனால் கதையை கேட்ட பிறகு, இப்படி ஒரு கேரக்டரில் நடித்தால் இதுவரை தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நான் சேர்த்து வைத்த பெயர், புகழ் எல்லாமே போய்விடும் என நடிக்க மறுத்துவிட்டார். ஆனால், இது ஒரு பெரிய விஷயம் இல்லை. எனக்கு சாதாரணம் என்று அந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் தானாக முன்வந்து நடித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





