தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் அவர் நடிகரான அறிமுகமான போது அவரது சம்பளம் ரூ. 10 ஆயிரமாக இருந்தது. இப்போது அவரது 25வது படம் பராசக்தி படத்தில் நடிக்க அவரது சம்பளம் ரூ. 70 கோடி என்று சொல்லப்படுகிறது. இதற்கு கடந்தாண்டில் வெளியான அமரன் படத்தின் அபரிமிதமான வெற்றியே காரணம்.
நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்த வரை ஆரம்பத்தில் இருந்தே தனது சினிமா பாதையை சிறப்பாக திட்டமிட்டு அமைத்துக்கொண்டார். அடுத்தடுத்த தனது படங்களின் இயக்குனர்கள், கதாநாயகிகளை மிகவும் கவனமாக தேர்வு செய்தார். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான கதைகளில், கேரக்டர்களில் நடித்தார்.
அதிலும் சில படங்கள் தோல்வியடைந்தாலும் மற்ற படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து அடுத்தடுத்த உயரங்களுக்கு சிவகார்த்திகேயனை கொண்டு சென்றது. குறிப்பாக மனம் கொத்திப் பறவை வேலைக்காரன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ காக்கிச்சட்டை சீமராஜா டாக்டர் மாவீரன் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன.
கடைசியாக சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் அமரன் படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனே தயாரித்திருந்தார். இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி 325 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்போது மதராஸி, பராசக்தி என 2 படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ளன.
நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனும் நடிகர் தனுஷை போலவே தெலுங்கில் முக்கிய இடத்தை பிடிக்க தயாராகி விட்டார். தெலுங்கில் மார்க்கெட் இருந்தால்தான் பான் இந்தியா நடிகராக மாற முடியும் என்பதால் தெலுங்கிலும் தனது இமேஜை உயர்த்திக்கொள்ள முயற்சித்து வருகிறார்.
அதனால்தான் பராசக்தி படத்தில் தெலுங்கு ஸ்டார் நடிகரான ராணா டகுபதியை நடிக்க செய்திருக்கிறார். அதே போல் இனி தனது படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நேரடியாக தயாராகும் படங்களில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருக்கிறார். இதன்மூலம் நடிகர் தனுஷை போலவே தெலுங்கிலும் தனக்கென ஒரு மார்க்கெட் இமேஜை ஏற்படுத்திக் கொள்ள சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





