நடிகர் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னை இன்று முக்கிய பிரச்னையாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கூறியிருப்பதாவது, 26 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவி, பெற்ற குழந்தைகளை தனது பெற்றோரை கூட விஜய் பார்ப்பதில்லை. அவரை பார்க்க விடாமல் நடுவில் ஒருவர் தடையாக இருக்கிறார். அந்த நபரின் பெயரை நான் தேவைப்பட்டால் சொல்வேன்.
விஜயின் பாதுகாப்புக்காக மற்றவர்களை நெருங்க விடாமல் தடுக்கலாம். ஆனால் சொந்த குடும்பத்தை நெருங்க விடாமல் தடுக்கின்றனர். காரின் ஜன்னலை கூட விஜய் திறக்க மறுக்கிறார். எதற்காக இப்படி ஒரு மர்ம வாழ்க்கை? திருமண விழாவுக்கு திரிஷாவுடன் நட்பு ரீதியாக விஜய் வந்தார் என்று பலர் முட்டுக் கொடுக்கிறார்கள். ஆனால் விஜய் மனைவி சங்கீதா ஒரு நடிகையுடன் தொடர்பு என குற்றம் சாட்டிய நிலையில், நாம் இருவரும் ஒன்றாக செல்லக்கூடாது என்று ஒதுங்கி இருந்தால்தானே அது நல்ல நட்பு? இதை திரிஷா ஏன் செய்யவில்லை.
தவெக கொண்டாடிய மகளிர் தின விழா மேடையில் தலைவர் விஜய் பேசிய போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் உள்ள பிரச்னையை நேரடியாக சொல்லாமல் கோடிட்டு காட்டும் விதமாக பேசியிருந்தார். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அது வொர்த்தே இல்லை என்றும் கூறியிருக்கிறார். அந்த ஒரு வாக்கியம்தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது.
எது வொர்த் இல்லை தலைவா, உங்கள் மனைவியா, உங்கள் திருமண வாழ்க்கையா? ஒரு அரசியல் தலைவர் பேசும்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு குடும்பத்தில் மட்டுமே ஒலிக்காது, அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி, என்னை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். கட்டிய மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் வீட்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தருகிறேன் என்று நீங்கள் பேசுவது ஒரு கடும் முரண்பாடாக உள்ளது.
பெண்கள் உயர்வு பற்றி பேசிவிட்டு மறுபக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் இல்லை. இந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன? இன்றைய ஜென்ஸி தலைமுறையினர் சமூக ஊடகங்களில் என்ன பேசுகிறார்கள்? எங்கள் தலைவன் 7 பொண்டாட்டி கட்டுவான். அது தவறு இல்லை என்கின்றனர். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே. ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொதுவெளியில் வரும்போது அதை பார்த்து இளைஞர்கள், திருமணத்திற்கு பிறகு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணமே வரும்.
வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக கூறி பெண்ணியம் பேசும் நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல, வாழ்க்கையின் ஒழுக்கம். பெண் ஒரு உறவு மட்டுமல்ல, ஒரு மரியாதை. நன்றாக வளர்ந்து வரும் ஒரு அரசியல் இயக்கம் தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக்கூடாது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக சீர் கொடுப்பேன் என்கிறீர்கள். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன்பு பெற்ற குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பது முக்கியம். நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம். இளைஞர்களை சீர்குலைக்காமல் இருப்பதே நல்லது என்று ரஞ்சனா நாச்சியார் கூறியிருக்கிறார்.





