தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, இயக்குனராக அவதாரம் எடுத்து, பின்னர் நடிகராக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக இருந்த காலத்தில், நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் லாரன்ஸ். ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அற்புதம், பாண்டி, ராஜாதி ராஜா என அவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தன.
இப்படியான சூழலில்தான் ராகவா லாரன்ஸ்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது முனி திரைப்படம். ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். கதையில் ஒன்றும் பெரிய மாற்றத்தை அவர் செய்யவில்லை. வழக்கம்போல ஒரு பங்களா. அதில் பதுங்கி இருக்கும் அமானுஷ்யம். அந்த பங்களாவுக்கு செல்லும் ஹீரோ,
அமானுஷ்யத்தால் பாதிக்கப்படும் ஹீரோ பிறகு அதற்கே நல்லது செய்வது என்ற ஒரே வகையான கதையைத்தான் அவர் கொடுத்திருந்தார். ஆனால் மற்ற திரைப்படங்களில் இருந்து அது வேறுபட்டதற்கு காரணம் அதில் அவர் நகைச்சுவையை கொண்டு வந்ததுதான். ஹாரர் திரைப்படங்களில் நகைச்சுவையை எப்படி திணிக்க முடியும் என கேள்வி எழுப்பிய அத்தனை பேருக்கும், தனது இயக்கத்தின் மூலம் பதில் அளித்தார்.
இப்படியாக முனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து நகைச்சுவை கலந்த ஹாரர் தொடர்பான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார் லாரன்ஸ். இது அவருக்கு கை மேல் பலன் கொடுத்தது. காஞ்சனா திரைப்படத்தை அவர் இயக்க, அது பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார்.
தொடர்ந்து இதன் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை இயக்கியிருந்தார் ராகவா லாரன்ஸ். தற்போது ஒரு சிறிய இடைவெளி விட்டு நான்காவது பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அதுபோக பாலிவுட் நடிகையான, நோரா பதேகியும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். பொள்ளாச்சியில் இதன் சூட்டிங் பணிகள் ஆரம்பித்தன.
தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக புதுச்சேரிக்கும் காஞ்சனா 4 படக்குழு பயணம் ஆனது. அங்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பதாக பேசப்படுகிறது. எப்போதுமே தனது ஹாரர் திரைப்படத்தில், பிளாஷ்பேக் போர்ஷனில் முக்கியமான நட்சத்திரங்களை ராகவா லாரன்ஸ் நடிக்க வைத்திருப்பார். அந்த வகையில், தற்போது ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





