தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்தவர் விஜய். 33 ஆண்டுகளாக இந்த இடத்தை பிடிக்க பல போராட்டங்களை சந்தித்து முன்னுக்கு வந்தவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் உருவக்கேலிக்கு ஆளான விஜய் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் என்றால் அது மிகையல்ல.
ஆனால் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தலையும் சந்தித்தார். கூட்டணி பலம் இன்றி தனித்தே 233 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிட்டது. இதில் 108 இடங்களில் வெற்றி பெற்று, இப்போது கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழக முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார்.
அத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகன் படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக அறிவித்து விட்டார். ஒருவேளை விஜய் தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தால் மீண்டும் நடிக்க வந்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு தகவலும் அடிபட்டது. ஏனெனில் 5 ஆண்டுகளுக்கு விஜய் சினிமாவில் நடிக்காமல் இருக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.
இதே போல் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சியில் எம்எல்ஏவாகி பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின்பு தமிழக துணை முதல்வர் பொறுப்புக்கு வந்த உதயநிதி சினிமாவை அப்படியே விட்டுவிட்டு அரசியல் களத்தில் முழு கவனம் செலுத்தினார்.
ஆனால் கடந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை தொடர முடியாத நிலையில் உதயநிதி இப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவராக உள்ளார். அதே நேரத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க அவர் முடிவு செய்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கதைகளில் அவர் நடித்து மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்திருக்கிறார்.
சினிமாவில் இருந்த விஜய் அரசியலுக்கு சென்று முதல்வராகி விட்டார். துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஆனால் இந்த முறை ஆளுங்கட்சியை விமர்சிக்கும் அரசியல் கதைக்கள படங்களில் நடித்து வருகிற 2031 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கவே உதயநிதி இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





