நடிகர் அஜீத்குமார் நடிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 8 மாதங்களாக உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இதில் துவக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்த நிலையில், அடுத்து 4 மாதங்கள் படப்பிடிப்பே நடக்கவில்லை. இப்போது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கி நடந்து வருகிறது.
நடிகர் அஜீத்குமார் கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளிவந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக அஜீத் நடித்த படம் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை.
விடாமுயற்சி படப்பிடிப்பும் பாதியில் நின்றுவிட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கடந்த மாதம் கலந்துக்கொண்டார் நடிகர் அஜீத்குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் முடித்த நிலையில், மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.
இந்நிலையில், அஜர்பைஜானில் முக்கிய சண்டை காட்சியுடன் படப்பிடிப்பை நடத்த டைரக்டர் மகிழ்திருமேனி திட்டமிட்ட சூழலில், அந்த சண்டைக் காட்சியை சென்னையில் வைத்தால் வந்து நடிக்கிறேன், என்று அஜீத்குமார் கூறியதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் லைகா புரடக்சன்ஸ் தரப்பில், சரியானபடி பேசிய சம்பளத்தை அஜீத்குமாரின் வங்கி கணக்கில் 3 மாதங்களாக சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பிரச்னைகளை தொடர்ந்து, அஜீத்குமார் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வாரா, மாட்டாரா என்ற குழப்பமான சூழல் ஏற்பட்டது. அஜீத் ரசிகர்களும், விடாமுயற்சி படம் வெளிவருமா, வராதா, பாதியில் படப்பிடிப்பு நிற்கிறதே என பெரும் கவலையில் இருந்தனர். இந்த சூழலில் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் துவங்கி விட்டதாகவும், அதில் அஜீத்குமார் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருவதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளிவந்துள்ளன,
துணிவு படத்துக்கு பிறகு, 2023ம் ஆண்டில் அஜீத்குமார் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக பேசப்பட்ட போதே, ரூ. 75 கோடிக்கு அந்த படத்தை விலைபேசி வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம். பிறகு, விக்னேஷ் சிவன் ஒதுங்கிக்கொள்ள, விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். வரும் தீபாவளிக்கு, அக்டோபர் 31ம் தேதி, விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்யாவிட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த படத்தை வாங்க மாட்டோம் என்றும் கூறிவிட்டது நெட்பிளிக்ஸ். இதனால் நெருக்கடியை உணர்ந்துக்கொண்ட அஜீத்குமார், வேறு வழியில்லை, எப்படியும் தீபாவளி விடாமுயற்சி படம் வந்தாக வேண்டிய நெருக்கடியில், முழு ஒத்துழைப்பு தந்து ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.





