லியோ படம் வருகிற 19ம் தேதி, தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் காட்சி அன்று இல்லாததால், அதற்கு முன்னதாக 18ம் தேதி மாலை, லியோ பிரிமியம் பெய்டு ஷோ என்ற பெயரில் ரசிகர்கள் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. இதற்கு 2 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் என டிக்கெட் கட்டணங்கள் அதிகம் என்பதால், விருப்பமான மற்றும் வசதியான ரசிகர்கள் மட்டுமே, இந்த காட்சிகளை காண முடியும். மாலை 6.30 மணி, இரவு 10.30 மணி என இந்த சிறப்பு காட்சிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.
எனவே, அதிக டிக்கெட் கட்டணம் செலுத்தி பிரிமியம் பெய்டு ஷோ பார்க்க அனைத்து தரப்பு ரசிகர்களாலும் முடியாத நிலையில், 19ம் தேதி லியோ ரிலீஸ் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நாளில், அனைத்து தியேட்டர்களிலும் வழக்கமான 4 காட்சிகளில், லியோ படத்தை ரசிகர்கள் காணலாம். இதற்காக வரும் 15ம் தேதி முதல், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு நடக்க உள்ளது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில்,. நேற்று முன்தினம் மாலை லியோ டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். சந்தோஷப்பட்டனர் என்பதை விட பலரும் நொந்து போயினர் என்பதே உண்மை. ஏனெனில், விஜய் பேசிய தப்பான வசனம் பலரையும், குறிப்பாக பெண்களை முகம் சுளிக்க வைத்தது. விஜய் அண்ணாவா இது என, இளம் பெண் ரசிகைகள் பலரும், வாயை பொத்திக்கொண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுமட்டுமின்றி சென்னை ரோகினி தியேட்டரில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர் கூட்டம், திரையரங்குக்குள் இருந்த இருக்கைகளை உடைத்து, ஸ்கீரினை கிழித்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அவர்கள் பங்குக்கு விஜய் படத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தினர். இதுவும் பேசு பொருளாகி, விஜய் கடுமையான விமர்சனத்தில் சிக்கினார்.
ஆனால், இப்படி சோதனை மேல் சோதனையாக இருந்தாலும், டிரெய்லர் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருவதுதான் வியப்பளிக்கிறது. இதற்கு முந்தைய விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில், 29.08 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இப்போது அந்த சாதனையை விஜய் நடித்த லியோ படமே, 22 மணி நேரத்தில் முறியடித்து 30 மில்லியன் பார்வையாளர்களை லியோ டிரெய்லர் கடந்தது.
இப்போது, இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை லியோ டிரெய்லர் கடந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. அதுமட்டுமின்றி ப்ரீ டிக்கெட் புக்கிங் வாயிலாக இதுவரை 15 கோடி ரூபாய்க்கு இந்த படத்தின் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. உலக தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் இப்படி ப்ரீ டிக்கெட் புக்கிங் வாயிலாக ரூ. 15 கோடி வருவாயை எட்டியதில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ படத்தின் டிரெய்லர் ஒருபுறம் சோதனைகளை சந்தித்தாலும் மறுபுறம் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.





