தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில்தான் இவரது காமெடி ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மாமு, வேற மாதிரி ஆகிப்போயிடும் என்ற அவரது மிரட்டலுக்கு தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை.
தொடர்ந்து டாக்டர், ஜெயிலர், மார்க் ஆண்டனி, அன்னபூரணி, கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இப்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திலும் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் காமெடி நடிகரான அவர் பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.
சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் கூட அந்த காட்சியின் அமைப்பும், அந்த நடிகர்களின் நடிப்பின் பிரதிபலிப்பும் கதைக்கேற்ப அவர்களின் முக்கியத்துவமும் அவர்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அந்த வகையில் தனது யதார்த்தமான நடிப்பால், வித்யாசமான உடல் மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர்தான் ரெடின் கிங்ஸ்லி.
இந்நிலையில், 46 வயதான ரெடின் கிங்ஸ்லி, பிரபல நடிகை சங்கீதாவை திருமணம் செய்திருக்கிறார். பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் படங்களில் நடித்தவர் சங்கீதா. சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சங்கீதா இருக்கிறார். டிவி சீரியல்களிலும் சங்கீதா பிஸியாக நடித்து வருகிறார். 46 வயதான ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா மணம் புரிந்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இது எந்த படத்தின் படப்பிடிப்பும் அல்ல. நிஜமாகவே திருமணம் நடந்துவிட்டது. வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. பிளாக்பஸ்டர் வாழ்க்கை அமைய வாழ்த்துகள், என பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற திரைப்பட பிரபலங்கள், சினிமா ஷூட்டிங் நடிக்கும் காட்சிகளை எடுத்து பதிவிட்டு, அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவர். அது வைரலாகி விடும். ஆனால் இது வதந்தி அல்ல. உண்மையிலேயே அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அதை தான் நடன இயக்குநர் சதீஷ் தனது பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.





