தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. பிறகு அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்று சமீபத்தில்தான் அவர் அறிவித்தார். அதே போல் அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை நடிகர் அஜீத்குமாரும் உலக நாயகன் பட்டத்தை நடிகர் கமல்ஹாசனும் தனக்கு வேண்டாம் என்று ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் அன்னபூரணி. இவரது 75வது படம். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இருந்ததால் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய அளவில் விமர்சனத்திலும் சிக்கியது.
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நயன்தாரா நடித்த மனசங்கர வரபிரசாத் காரு படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி இருந்தார். ஆனால் தமிழில் கடந்த 3 ஆண்டுகளாக நயன்தாரா நடித்த படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் பாடல் ஆசிரியர் விஷ்ணு எடவன் புதுமுக இயக்குனராக அறிமுகமாகும் படம் ஹாய். இந்த படத்தில் நடிகர் கவின் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஆகஸ்ட் 14ம் தேதி அன்று வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா மமீதா பைஜூ நடித்துள்ள விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளது. நடிகர் விஷால் மூன்று வேடங்களில் நடித்து அவரே முதன் முறையாக டைரக்ட் செய்துள்ள மகுடம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன.அந்த 2 படங்கள் வெளியாகும் அதே நாளில் ஹாய் படமும் வெளியானால் போதிய எண்ணிக்கையில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காது.
மேலும் சில நிதி சிக்கல்கள் காரணமாகவும் ஹாய் படம் ரிலீஸ் தேதி தள்ளி போக ஒரு வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதியை வருகிற 14ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தரப்பில் வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நயன்தாரா ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.





