தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ஆதி. இவர் மிருகம் ஈரம் மரகத நாணயம் அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மிருகம் படம்தான் இவர் அறிமுகமான முதல் படம். இந்த படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் ஆதி நடித்திருக்கிறார்.
ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் ஆதி நடித்துள்ள படம் சப்தம். இந்த படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஆதி நடிகை நிக்கி கல்யாணியை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். மொட்ட சிவா கெட்ட சிவா கலகலப்பு 2 டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி கல்யாணி நாயகியாக நடித்திருக்கிறார்.
சப்தம் படம் நாளை வெளிவருவதை முன்னிட்டு நடிகர் ஆதி தொடர்ந்து படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அப்போது ஆதி கூறியதாவது, நானும் என் மனைவி நிக்கி கல்யாணியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ஆனால் நாங்கள் பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் அடிக்கடி செய்திகள் இணையத்தில் பரவுகின்றன.
நிக்கி கல்யாணியுடன் என் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருக்கிறது. இருவரும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் சில நேரங்களில் ஆதாரமற்ற நிலையில் நாங்கள் விவாகரத்து செய்துவிட்டதாக சில யூடியூப் சேனல்கள் ஆதாரமற்ற செய்திகளை பரப்புவது மிகுந்த மன வலியை தருகிறது.
காதலிக்கும் முன்பு நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். திருமணத்துக்கு பிறகு கணவன் மனைவியாக ஆன பின்பும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இன்னும் இருக்கிறோம். இதயத்தால் நாங்கள் இருவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். அப்படி இருக்கும்போது எங்களை பற்றி இதுபோன்ற வதந்திகள் வருவது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.
முதலில் இதுபோன்ற விஷயங்கள் எனக்கு மிகுந்த வேதனையை தந்தது. ஆனால் வருமானத்துக்காக சில யூடியூப் சேனல்கள் இப்படி தவறான தகவல்களை, ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறது என்பதை புரிந்துக்கொண்ட பின்பு, அவற்றை நான் பெரிதாக கண்டுகொள்வது இல்லை என்று அந்த நேர்காணலில் நடிகர் ஆதி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





