நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் வெளியான கங்குவா படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தும் கதை திரைக்கதை சரியாக இல்லாததால் படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் எனினும் இதில் அவரது இயக்கம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை.
கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் உருவாகி உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். காதல் ஆக்சன் கதைக்களத்தில் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நடிகர் சூர்யாவுக்கு நிச்சயமாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே என்ற பாடலும் கனிமா என்ற பாடலும் ஏ ஒன் என்ற பாடலும் என 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக ரஜினி பிற ஹீரோக்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டார் என்றாலும் சூர்யா சிவக்குமார் கார்த்திக் சுப்பராஜூக்காக அவர் பங்கேற்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே ரெட்ரோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தூத்துக்குடி பாஷை பேசி நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். ஏற்கனவே சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 படங்களில் சூர்யா, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சிங்கம் சிங்கம் 2 படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
இப்போது ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில்தான், ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியீடும் நடக்க உள்ளது. வருகிற மே 1ம் தேதி ரெட்ரோ படம் ரிலீஸாகிறது. முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் டிரெய்லர் வெளியீடு செய்யப்படுகிறது. இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





