தமிழ் சினிமாவையே புரட்டிப் போடும் ஒரு படமாக ரூ. 2000 கோடி வசூலிக்கும், நெருப்பு மாதிரி இருக்கும், எல்லாரும் வாயை பிளந்துட்டு படம் பார்ப்பாங்க என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்டு திரையில் நேற்று வெளியான படம்தான் கங்குவா. இப்படி ஒரு படம் சூர்யாவுக்கு அவசியம்தானா என்ற கேள்வியை சத்தமாக கேட்க வைத்திருக்கிறது கங்குவா படம், இல்லை கத்துவா படம்.
படம் முழுக்க எல்லா கேரக்டர்களும் சத்தமாக பேசவில்லை. கத்திக்கொண்டே இருக்கிறார்கள். காடு காடாக போய் கத்துகிறார்கள். சூர்யா, எல்லோரும் வாயை பிளந்துகிட்டு கங்குவா படம் பார்ப்பாங்க, என்றார். ஆனால் எல்லோரும் காதுகளை பொத்திக்கொண்டு படம் பார்க்க வேண்டும் என்று சொல்ல மறந்துவிட்டார்.
முதலில் படத்தின் வெற்றிக்கு மையமாக இருப்பது, படத்தின் கதை மற்றும் மையக்கரு. திரைக்கதை மற்றும் அதை திரையில் சொல்லும் விதம். இதுதான் ரசிகர்களை, அந்த படத்துடன் இணைய வைக்கும். நடிப்பு, பிரமாண்டம், மேக்கிங், விஎப்எக்ஸ் எல்லாம் அப்புறம்தான். இங்கு படமே புரியாத போது, கதை என்னவென்றே தெரியாத போது ரசிகர்களால் படத்தை எப்படி ரசிக்க முடியும்.
படத்தில் வரும் கேரக்டர்கள் கத்துவது போதாது என்று, படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அத்தனை இசைக்கருவிகளையும் சகட்டு மேனிக்கு வாசிக்க வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு ஸ்டுடியோவுக்கு அருகில் உள்ள நான்கைந்து பாத்திர கடைகளுக்கு சென்று அங்கிருந்த பாத்திரங்களை வாங்கி வந்து, அதையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்.
காதில் பஞ்சு வைக்காத குறையை போக்க, இனி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டிக்கெட்டுடன் 10 கிராம் பஞ்சும் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள், சூர்யாவுக்கே கோரிக்கை வைத்துள்ளனர். 4 நாட்கள் கூட கங்குவா, தியேட்டர்களில் தங்காது என்பதுதான் ரசிகர்களின் ஒட்டுமொத்த விமர்சனமாக இருக்கிறது.
ஆனால் படத்தில் அனைவரது உழைப்பும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகி விட்டதுதான் கசப்பான உண்மை. கொசுவர்த்தி வாங்கிட்டு போனா, தியேட்டர்ல நிம்மதியாக படுத்து தூங்கலாம். ஆனா கங்குவா படத்துல அது கூட முடியாது. அந்த சத்ததத்துல தூங்கக்கூட முடியாது என கலாய்த்துள்ளார் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன். சிறுத்தை சிவா, சூர்யாவை வெச்சு செஞ்சுட்டார் என சூர்யா ரசிகர்களே புலம்புகின்றனர்.





