தமிழ் சினிமா இயக்குநர்களில் பெரும்பாலானவர்களிடம் சொந்த சரக்கு இல்லை என்பது ரசிகர்கள் தெளிவான அறிந்த விஷயம்தான். பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் எல்லாமே ஜெராக்ஸ் கடை நடத்தாத குறையாக, மற்ற மொழி படங்களை அப்படியே காப்பியடித்தோ, அல்லது அந்த கதைக்கருவை திருடியோ தங்களது சொந்த கதை படமாக இயக்குகின்றனர்.
வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், ரவிக்குமார் போன்றவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து சரக்குகளை எடுக்கின்றனர், அட்லி, சுந்தர் சி போன்றவர்கள் தமிழில் வந்த பழைய படங்கள், அல்லது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அண்டை மாநில படங்களின் கதைகளை ஸ்வாஹா செய்து, தமிழ் படங்களாக மாற்றித் தருகின்றனர்.
அதாவது பழைய சாப்பாடுடன் புதிய வகை மசாலா அயிட்டங்களை சேர்த்து, சூடுபடுத்தி தரும் பாஸ்ட் புட் தள்ளுவண்டி கடைகளை போல, தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் செயல்படுவது உண்மையான படைப்பாளிகளாக உள்ள பாரதிராஜா, வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்றவர்களையும் அவமதிப்பதாகவே இருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு சம்பவம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. அதாவது இறைவன் படத்தை எடுத்த இயக்குநர் அகமது, ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் எடுத்துள்ளார். இறைவன் படம் ஊத்திக்கொண்டது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். அதற்கு பின்பு நடந்த சம்பவம்தான் இது.
கதை பிடித்துவிட்டதால் அஜர்பைஜானில் போய் பல நாட்கள் ஷூட்டிங் நடத்தியுள்ளனர். படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது. படத்தின் இயக்குநர் அகமது, தெலுங்கு படம் ஒன்றின் கதையை அப்படியே, காப்பியடித்து இந்த தமிழ் படத்தை எடுத்திருக்கிறார், ஆனால், இந்த படத்தில் ஒரு தெலுங்கு நடிகரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு செல்ல செல்ல, இது தெலுங்கில் வந்த அந்த படமாச்சே என புரிந்துக்கொண்ட அந்த நடிகர், நேரடியாக சென்று அந்த தெலுங்கு படத்தை தயாரித்த தயாரிப்பாளரிடம் உண்மையை சொல்கிறார். அவர், நேரடியாக லைக்கா நிறுவனத்திடம் பேசியிருக்கிறார். அதற்கு அபராதமாக ரூ. 3 கோடி அந்த தெலுங்கு பட தயாரிப்பாளருக்கு தந்துள்ளனர். ஆனால், படத்தை பிறகு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இயக்குநர் பார்த்த காப்பி அண்ட் பேஸ்ட் வேலையால் லைக்கா தயாரிப்பு நிறுவனமும், படத்தின் ஹீரோ நடிகர் ஜெயம் ரவியும் நொந்து போயுள்ளனர்.





