தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய், அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்காக திரைத்துறையில் இருந்து விலகவும் முடிவு செய்து இருக்கிறார் விஜய்.
அதன்படி தனது கடைசி திரைப்படத்தை அவர் அறிவித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச் வினோத் இதனை எடுத்து வருகிறார். பூஜா ஹெக்டே படத்தில் கதாநாயகியாக வருகிறார். மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோரும் ஜனநாயகனில் இருக்கிறார்கள்.
வில்லனாக வருகிறார் பாபி தியோல். இவர் ஏற்கனவே சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில், வில்லனாக வந்திருந்தார். பிரகாஷ்ராஜ், நரேன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். கட்சி வேலைகளில் விஜய் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், படப்பிடிப்பு சென்னையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
பையனூரில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் இதன் முக்கியமான காட்சிகளை எடுத்தார்கள். இந்த திரைப்படம் அரசியல் கலந்த கமர்சியல் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தில், வருமான வரித்துறை அதிகாரியாக விஜய் நடிப்பதாகவும் பேசப்பட்டது.
இந்த நிலையில் வரும் மே மாதம் ஐந்தாம் தேதியோடு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு சில பேட்ச் வொர்க் பணிகள் மட்டுமே நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட, கே வி என் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 100 கோடி ரூபாய் பேசப்பட்டதாகவும், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அது 90 கோடி ரூபாயாக முடிவு செய்யப்பட்டதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் தி கோட், அஜித் குமாரின் குட் பேட் அட்லி ஆகிய திரைப்படங்களை ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.





