தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவரது மகன்கள் தான் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ். இதில் நடிகர் ஜீவா பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ஆனால் ஜித்தன் ரமேஷ் பெரிய அளவில் நடிகராக பிரபலம் ஆகவில்லை.
சூப்பர் குட் பிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் தயாரித்துள்ளது. குறிப்பாக புதுவசந்தம் புரியாத புதிர் சேரன் பாண்டியன் புத்தம்புது பயணம் முதல் சீதனம் அபிராமி கோகுலம் கேப்டன் என இதுவரை 95 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. விரைவில் வடிவேலு பகத்பாசில் நடிப்பில் வெளிவர உள்ள மாரீசன் படத்தையும் சூப்பர் குட் பிலிம்ஸ்தான் தயாரித்துள்ளது.
இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் 100வது படத்தை நடிகர் விஜய் நடிக்கும் படமாக தயாரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்திருந்தது. எப்படியும் விஜய் நடித்தால் அது தங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருமை, வசூல் ரீதியாகவும் 100வது படத்தின் அபார வெற்றி காலத்துக்கும் நிறுவனத்தின் பெயர் சொல்லும் என்றும் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி ஆசைப்பட்டார்.
ஆனால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி அதன் தலைவராக மாறிவிட்டார். ஜனநாயகன் படத்துக்கு பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் ஏற்கனவே அவர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதனால் இனி தமது நிறுவன தயாரிப்பில் 100வது படத்தில் விஜய் நடிக்க போவதில்லை என்று தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தெரிந்துக்கொண்டார்.
அதனால் இப்போது ஆர்பி சௌத்ரி புதிய முடிவை ஒன்றை எடுத்திருக்கிறார். அதன்படி தனது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக தனது நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1990களில் வெளியான மாஸ் ஹிட் படம் சூரிய வம்சம் படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார். ஆனால் படத்தின் டைரக்டர் விக்ரமன் இல்லை. வேறு இயக்குனர்தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சரத்குமார் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் நடிகர் ஜீவாவும் நடிக்கிறார். தேவயானி இந்த படத்தில் மீண்டும் நடிப்பாரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் சமீபத்தில்வெளியான 3 பிஹெச்கே படத்தில் சரத்குமாரும் தேவயானியும் மீண்டும் இணைந்து நடித்திருப்பதால், சூரியவம்சம் 2 படத்திலும் தேவயானி நடிப்பார் என்றே சொல்லப்படுகிறது. மேலும் 3 பிஹெச்கே படமும் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.





