தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் குவித்து வருகிறது. ஆரம்பத்தில் நகைச்சுவையை மட்டும் தனது ஆயுதமாக பயன்படுத்தி வந்த சிவகார்த்திகேயன், தற்போது அதிலிருந்து வெளியேறி வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார். அதில் மிக முக்கியமான படமாக அவருக்கு அமைந்திருக்கிறது அமரன்.
சொல்லப்போனால் முழு நேர ஆக்சன் நடிகராகவே சிவகார்த்திகேயன் மாறிவிட்டார். ராணுவ வீரருக்கே உண்டான கட்டுமஸ்தான உடலமைப்புடன் கம்பீரமாக படத்தில் அவர் காட்சியளிக்கிறார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை கதைகளமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. காதல், ஆக்சன் என அனைத்தும் சரியான விகிதத்தில் இருப்பதால் இத்திரைப்படம் ஹிட் அடித்துள்ளது.
குறிப்பாக கடைசி பத்து நிமிடங்கள் படத்தை பார்ப்பவர்களை கண் கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேசப்படுபவர் சாய் பல்லவிதான். முகுந்த் வரதராஜனின் மனைவியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் வாழ்த்திருக்கிறார் அவர்.
படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் கொடுக்கும் முக பாவனைகள் கை தட்டல்களை பெறுகின்றன. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா நட்சத்திரமாக வலம் வரும் அவருக்கு, அமரன் திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அமரன் திரைப்படம் தற்போது வரை இருநூறு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகை, தமிழில் இந்த திரைப்படம் தனக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருக்கிறது என்று பேசினார். இதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே அவர் தனுஷுடன் மாரி 2 ஆம் பாகம் மற்றும் சூர்யாவுடன் என்ஜிகே படங்களில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமாரான விமர்சனத்தை பெற்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் நடித்த படம் பிளாக்பஸ்டர் என்று அவர் கூறியிருப்பதை குறிப்பிட்டு எஸ்.கே. ரசிகர்கள் வீடியோவை பரப்பி வருகின்றனர். பதிலுக்கு தனுஷ், சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம் செய்து வருவதால் இணையத்தில் இது பேசுபொருளாகி இருக்கிறது.





