ஏ ஆர் முருகதாஸுக்கு சமீபகாலமாகவே தோல்வி திரைப்படங்கள் குவிந்து வருகின்றன. அவரது இயக்கத்தில் வெளியான, மதராசி திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எல்லையை அது தொடவில்லை. விஜயை வைத்து முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படத்திலிருந்து அவருக்கு சறுக்கல் ஆரம்பித்தது. ஏற்கனவே துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்களை முருகதாஸ் கொடுத்திருந்ததால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால் அது அனைத்தும் புஸ்வானமாக மாறிப்போனது. பிறகு ரஜினிகாந்தை வைத்து தர்பார் திரைப்படத்தை எடுத்து அதிலும் தோல்வியை தழுவினார் ஏ ஆர் முருகதாஸ். முன்னதாக மகேஷ்பாபு உடன் அவர் கைகோர்த்த ஸ்பைடர் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இப்படியான சூழலில் சிவகார்த்திகேயனை வைத்து, மதராசி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் முருகதாஸ். இதற்கான பணிகள் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மதராசி வேலைகளை ஒத்திவைத்து விட்டு, சிக்கந்தர் திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தினார் முருகதாஸ்.
இந்தத் திரைப்படம் கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து மதராசி திரைப்படம் வெளியான நிலையில், அதுவும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முருகதாஸிற்கு கம்பேக் திரைப்படமாக இது அமையவில்லை என்று பலரும் கூறினார்கள். இப்படியான சூழலில் சிக்கந்தர் நாயகன் சல்மான் கான், இயக்குனர் முருகதாஸை பொதுவெளியில் கிண்டல் அடித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 19 ஆவது சீசனை நடத்தி வரும் அவர், இது குறித்து பேசுகையில், நான் படப்பிடிப்புக்கு இரவு 9 மணிக்கு வந்ததாக முருகதாஸ் கூறியிருந்தார். அந்த சமயம் எனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு, வேறு ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆம் அதுதான் மதராசி. அந்த நடிகர் காலை 6 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் வந்து விடுவாராம்.
ஆனால் அந்த திரைப்படம் சிக்கந்தரை விட பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்து விட்டதா என்ன?. சிக்கந்தர் திரைப்படத்தை முதலில் முருகதாஸ் பார்க்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். சிக்கந்தர் மதராசி என ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை எடுத்திருந்த ஏ ஆர் முருகதாஸ், அந்த இரண்டு படங்களையும் பிளாப் ஆக்கிவிட்டார் என்று பேசியிருக்கிறார். சல்மான் கானின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





