இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படைப்பாளியாக மதிக்கப்படுகிறார். ஒரு மரியாதைக்குரிய சிறந்த கலைஞராகவும் பார்க்கப்படுகிறார். நாடோடிகள் என்ற படம் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்ற இயக்குனர் சமுத்திரக்கனி, சுப்ரமணியபுரம் படத்தில் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நிரூபித்திருந்தார்.
சசிக்குமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தார். அதேபோல் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில், சசிக்குமார் நடித்தார். அதுமட்டுமின்றி பருத்திவீரன் படப்பிடிப்பின்போது இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனர்களாக சமுத்திரக்கனி, சசிக்குமார் இருவருமே பணிசெய்துள்ளனர்.
இயக்குனர் சமுத்திரக்கனி, புரட்சிக்கரமான கேரக்டர்களில் நடிக்கக் கூடியவர். அதில் அவரது சமுதாய அக்கறை வெளிப்படும். உதாரணமாக சாட்டை, சாட்டை 2, அப்பா, நாடோடிகள் 2, தொண்டன் என அவரது நடிப்பும், கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தன. பாயும் புலி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற சில படங்களின் வில்லனாகவும் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
சமீபத்தில், தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மிக நல்ல விஷயம். ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோ, அந்த சினிமாவை மறுத்துவிட்டு அரசியலுக்கு வருவதே மிகப்பெரிய கெத்து. அவருக்கு என் சல்யூட் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, தம்பி விஜய் என்னை அழைக்க வேண்டியதே இல்லை. இந்த சமுதாயத்துக்கு நல்லது நடக்கும் என்றால், நானே விஜயுடன் சேர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்வேன். விஜய் அழைக்கட்டும் என்று காத்திருக்கும் கேரக்டர் நானில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி சமுதாய அக்கறை உள்ள இயக்குனராக இருப்பதை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியும் சு.வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. ஊழல், லஞ்சத்துக்கு பேர் போன திமுக கட்சியில் உள்ள கூட்டணி வேட்பாளருக்கு இப்படி சமுத்திரக்கனி பிரசாரம் செய்வது சரியா, எதற்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.





