இயக்குநர் அமீர் குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இயக்குநர், நடிகர் சசிக்குமார் நேற்று, அமீருக்கு கடைசி கட்ட படப்பிடிப்புக்கான தொகையை நான்தான் கடனாக கொடுத்தேன் என்று கூறிய நிலையில், இப்போது இயக்குநர் சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திரு. ஞானவேல் ராஜா, அண்ணன் அமீர் பத்தி ரொம்ப ரொம்ப தப்பா பேசியிருக்கீங்க. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து, கடைசி வரைக்கும் இருந்தவன் நான். எல்லா உண்மைகளும் எனக்குத் தெரியும். படப்பிடிப்பு தளத்துல ஒரு நாள் கூட உங்களை நான் பார்த்தது இல்லை. பருத்திவீரன் சம்பந்தமே அவங்களே பேசிக்குவாங்கன்னு தான் நான் அமைதியா இருந்தேன்.
பருத்திவீரன் படத்துக்காக அமீர் எவ்வளவு உழைத்தார், கஷ்பட்டாருன்னு எனக்கு தெரியும். கால்வாசி படத்தோட நின்ன படத்தை, நண்பர்கள், உறவினர்கள் கிட்ட 50 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சமுன்னு கடன் வாங்கி படத்தை முடிச்சார். அப்படி அந்த பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்தவனே நான்தான். தம்பி சசிக்குமாரும் பணம் கொடுத்திருக்கான். இப்படி 50, 60 பேர் கிட்ட கடன் வாங்கி தான் இந்த பருத்திவீரன் படத்தை அமீர் முடித்தார்.
யார் வேணா பேசட்டும். ஆனா, கார்த்தி இதுல பேசாம இருக்கிறது நியாயம் இல்ல. இதை என்னால ஏத்துக்க முடியல. ஒருமுறை, அமீரோட நண்பர் ஏன் இவ்வளவு சிரமப்படறே, படத்தை அப்படியே விட்டுடுன்னு சொன்னார். அதற்கு அமீர், இது கார்த்தியோட எதிர்காலம், பெரியவர் (சிவக்குமார்) என்னை நம்பி கார்த்தியை என்கிட்ட ஒப்படைச்சிருக்காருன்னு சொன்னார்.
அம்பது, அறுபது பேர் கிட்ட பணம் வாங்கிட்டு வந்து கொடுத்த எனக்கே எவ்வளவு பணம், யாருகிட்ட வாங்கினேன்னு தெரியாது. அவருகிட்ட நீங்க எல்லாம் கணக்கு கேக்கறீங்க. அமீர் இல்லேன்னா, இன்னிக்கு கார்த்தியை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்குமா. அந்த நன்றியை மறந்துட்டு, அவரை மோசமுன்னு பேசிட்டு இருக்கீங்க.
பல பேருகிட்ட கையேந்தி, கடன் வாங்கி இந்த பருத்திவீரன் படத்தை அமீர் எடுத்து முடித்தார். அதுக்கு நீங்க ஆயிரம் கோடி, லட்சம் கோடி கொடுத்தாலும் இணையாகாது. நீங்க ஒன்றரைக்கு கோடிக்கு ஏதோ கணக்கு கேட்டு இருக்கீங்க. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. தேவைப்பட்டா அதையும் பேசுவேன். இனிமே இப்படி பொதுவெளியில் தப்பாக பேசாதீங்க. இதோடு நிறுத்திக்கிட்ட எல்லோருக்கும் நல்லது என கோபமாக தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.





