தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருப்பவர் சமுத்திரக்கனி. குணச்சித்திர வேடத்திலும் அசத்தி வருகிறார். கமர்ஷியல் நடிகர்களுக்கு மத்தியில், தரமான கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் காலா படத்தில் நடிக்க வாய்ப்பு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது, எனக்கும் ரஜினிக்கும் கே பாலசந்தர்தான் குரு. ரஜினியை ஒரு நாளில் நேரில் பார்க்கணும், நேரில் பார்க்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் ரஜினி சீனியர். நான் பாலசந்தரின் கடைசி பையன். விசாரணை படம் பார்த்துட்டு ரஜினி சார் கூப்பிடுகிறார் என தகவல் வந்தது. நேராக அவரை பார்க்க சென்றேன்.
உங்களுக்கும் எனக்கும் ஒரே குரு தான். ஆனால் நாம் நேரில் சந்திக்கவே இல்லை என்று ரஜினி சொன்னார். அப்புறம் ஒருமுறை உங்களை கட்டிப்பிடித்துக்கொள்ளட்டுமா என்று ஆசையாக நான் கேட்டேன். அவரும் அனுமதிக்க, அவரை கட்டிப்பிடித்தேன். பிறகு நிறைய நேரம் ரஜினியுடன் பேசிக்கொண்டே இருந்தேன். பிறகு திரும்பி வந்துவிட்டேன்.
அதன்பிறகு ரஜினியுடன் எப்படியாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படி நடித்துவிட்டால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரில் இருந்து வந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். இந்த நடிப்பு வாழ்க்கைக்கும் ஒரு முழுமை கிடைத்துவிடும் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அப்போது தொண்டன் என்ற படத்தை நான் தயாரித்தேன். 45 நாட்கள் ஷெட்யூல் போட்டோம். ஆனால் அந்த படம் 38 நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதற்கு காரணம் இரவு பகலாக பாடுபட்ட படக்குழுவினர்தான். என்னுடைய கேஷியரை கூப்பிட்டு கேட்டபோது, 7 நாள் ஷூட்டிங் பணம் 21 லட்சம் ரூபாய் மீதம் இருப்பதாக சொன்னார். மீதி 21 லட்சம் ரூபாயை யூனிட்டில் இருக்கிற 110 பேருக்கும் பிரித்து கொடுக்க சொல்லிவிட்டேன். அதே போல் கொடுக்கப்பட்டது.
பிறகு அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது, இயக்குனர் பா ரஞ்சித் போன் வந்தது. அண்ணா, தலைவரோட காலா படத்தில் நடிக்கறீங்க, 3 மாதம் கால்ஷீட் வேண்டும் என்றார். நாம் எதை தேடி வந்தேமோ அது நம்மை தேடி வரும். நாம் சரியாக இருந்தால் என்று காலா பட வாய்ப்பு குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.





