தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகிய ஏ ஆர் முருகதாஸ், ஹிந்தியிலும் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கஜினி திரைப்படத்தை, அவர் ஹிந்தி மொழியிலும் கொண்டுபோய் சேர்த்தார். அங்கு அமீர்கான் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
பாலிவுட் திரையுலகத்திற்கு ஏற்ப சில மசாலாக்களை தூவி கதையை மாற்றம் செய்து எடுத்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்போதே யார் இந்த முருகதாஸ் என்று ஹிந்தி ரசிகர்களால் அவர் கவனம் பெற வைத்தார். இதன் பிறகு தமிழில் வெற்றி பெற்ற மௌனகுரு திரைப்படத்தையும் அவர் இந்தியில் ரீமேக் செய்தார்.
விஜய்யை வைத்து துப்பாக்கி என்னும் பிளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த முருகதாஸ் ஹிந்தியில் அதையும் ரீமேக் செய்தார். இப்படி இந்தி திரை உலகிற்கு பரீட்சையமான முருகதாஸ், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் அடர்ந்த தாடியுடன் காட்சியளிக்கிறார். ருக்மணி வசந்த் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
விக்ராந்த், துப்பாக்கி பட வில்லன் வித் யூத் ஜமால் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். அண்மையில் சென்னை பெருங்களத்தூரில் உள்ள பாலத்தில் இதன் படபிடிப்பு நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்த திரைப்படத்திற்கு அடுத்து, சல்மான் கான் உடன் இணைய இருக்கிறார் முருகதாஸ்.
இதற்கு சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இப்படியான சூழலில் சிக்கந்தர் திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கல்கி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். தற்போது அவர் இந்தி மொழியிலும் பயணிக்க இருக்கிறார்.





