நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்த கதாநாயகன். துவக்கத்தில் புலன் விசாரணை படத்தில், வில்லனாக அறிமுகமான சரத்குமார், ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்தவர்.
நாட்டாமை, சூரியவம்சம், சேரன் பாண்டியன், சமுத்திரம், நட்புக்காக, சூரியன், ஐயா என பல படங்கள் அவருக்கு சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன. முதல் மனைவி சாயா தேவியை பிரிந்த சரத்குமார், சூரிய வம்சம் படத்தில் நடித்த பிறகு, ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார்.
சரத்குமார் – சாயாதேவி தம்பதியின் மகள் வரலட்சுமி சரத்குமார் தமிழில் பல படங்களில் நடித்தவர். இப்போது தெலுங்கில் மிக பிஸியாக நடித்து வருகிறார். வரலட்சுமிக்கும், சிம்புவுக்கும் திருமணம் செய்துவிடலாம் என்ற ஒரு திட்டம் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
சரத்குமார் நடிகராக மட்டுமின்றி, அரசியல் ஆர்வமும் கொண்டவர். அதனால் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கடந்த 1996ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சியை துவக்கினார். ஆனால் ஒரு அரசியல்வாதியாக அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. சினிமாவில் பெற்ற சாதனைகள் வெற்றிகள், அரசியலில் அவருக்கு தொடரவில்லை. அரசியலை பொருத்தவரை சரத்குமாருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் சரத்குமார் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது சரத்குமார் கூறியதாவது, நான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் பொசிஷனுக்கு வந்திருப்பேன். 1996ல் சூரியவம்சம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக எனக்கு அமைந்தது. அரசியல் என் நடிப்பை பாதித்தது.
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து, நான் 1996ம் ஆண்டில் எடுத்த முடிவை திரும்பி பார்க்கிறேன். களத்தில் இறங்கிய பிறகு நடப்பது வேறாக இருக்கலாம். ஏனெனில் சினிமாவில் விஜய் இப்போது நம்பர் 1 நிலையில் டாப் ஸ்டராக இருக்கிறார். அப்படியே இருக்கலாம். ஏனெனில் கேரியர் ரொம்ப முக்கியம். தீவிர ஆய்வுக்கு பின்தான் விஜய் களத்தில் இறங்க திட்டமிட்டிருப்பார். ஆனால் இங்கிருந்து பார்க்கும்போது பார்க்கும் அரசியல் களம் வேறு. உள்ளே இறங்கிய பின் பார்க்கும் களம் வேறு. ஆனால் அவர் வருவது தவறு அல்ல. வாழ்த்துகள், என்று கூறியிருக்கிறார்.





