இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் பாகுபலி. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. குறிப்பாக முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டுமே, ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தியது. அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.
நான் ஈ, மகதீரா படங்களை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய இந்த படம், ராஜவம்சம் கதையை கொண்டிருந்தது. அதிலும் பிரபாஸ், அனுஷ்கா. தமன்னா, சத்யராஜ், நாசர், ராணா டகுபதி போன்ற பக்குவப்பட்ட, திறமையான நடிகர்கள் அந்த கேரக்டர்களாகவே வாழ்ந்தனர். குறிப்பாக ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யாகிருஷ்ணன் அசத்தலான, அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.
பெரும்பாலான படங்கள் முதல் பாகம் சிறப்பாக இருந்தால், இரண்டாம் பாகம் சொதப்பலாக இருக்கும். அப்படி பல படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன. உதாரணமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல்பாகம் இருந்த அளவுக்கு இரண்டாம் பாகம் எடுபடவில்லை.
பாகுபலி படத்தை பொருத்த வரை, மிகுந்த கவனம் ஈர்த்த ஒரு நல்ல கேரக்டராக இருந்தது கட்டப்பா தான். இந்த கட்டப்பா கேரக்டரில் நடித்திருந்த சத்யராஜ் நடிப்பு, ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்புத்துறையில் இருக்கும் சத்யராஜ், தன் நடிப்பு அனுபவத்துக்கான ஒரு பிரதிபலிப்பை இந்த கட்டப்பா கேரக்டரில் மிக இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார்.
முதல் பாகத்தில், பாகுபலியை முதுகில் வாளால் குத்திக் கொன்றது கட்டப்பா தான் என்பது தெரியும். ஆனால் எதற்காக அவரே பிரபாஸை குத்திக் கொலை செய்தார் என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் உடன் படம் முடியும். ஆனால் 2ம் பாகத்தில், அதற்கான காரணங்களை படம் அழகாக விவரிக்கும். கதாநாயகனையே குத்திக் கொல்லும் கேரக்டரில் கட்டப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார்.
அதனால் பாகுபலி படத்தின் ஆணிவேரான கேரக்டர்களில் ஒன்றாக, மிக முக்கியமானதாக இருப்பது கட்டப்பா கேரக்டர்தான். ஆனால் இவ்வளவு முக்கியத்துவமும், ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சத்யராஜ் கிடையாது. படத்தின் டைரக்டர் ராஜமவுலி அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான். ஆனால் அவர் கால்ஷீட் தராமல் நடிக்க மறுத்ததால், அடுத்ததாக அந்த வாய்ப்பு சத்யராஜை தேடி வந்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் சத்யராஜ்.





