தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் வில்லனாக அறிமுகமானவர். 1980களில் வெளியான பல படங்களில் ரஜினி, கமலுக்கு வில்லனாக நடித்து புகழ் பெற்றவர். 24 மணி நேரம், 100வது நாள் போன்ற படங்களில் கொடூரமாக வில்லனாக அவரை இயக்குனர் மணிவண்ணன் காட்டி மிரட்டியிருப்பார். பிறகு கடலோர கவிதைகள் படம் மூலம் சத்யராஜை, இயக்குனர் பாரதியாஜா ஹீரோவாக மாற்றினார்.
தொடர்ந்து ஆர் சுந்தர்ராஜன் பி வாசு மனோபாலா சுராஜ் போன்ற இயக்குனர்கள் சத்யராஜை ஹீரோவாக நடிக்க வைத்து வெற்றி பெற வைத்தனர். வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி, பிரம்மா, நடிகன், ரிக்ஷா மாமா, தோழர் பாண்டியன், அமைதிப்படை வாழ்க்கை சக்கரம் போன்ற பல படங்கள் சத்யராஜை முன்னணி நடிகராக மாற்றியது.
ஒரு கட்டத்துக்கு பிறகு சத்யராஜ் அப்பா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். பாகுபலி படத்தில் கட்டப்பா போன்ற குணச்சித்திர வேடங்களிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. நண்பன் படத்தில் கண்டிப்பான அதிகாரமிக்க பிரின்ஸிபல் கேரக்டரிலும், இசை படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை சத்யராஜ் காட்டியிருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜாலியான நடிப்பிலும் அசத்தியிருப்பார்.
துவக்கத்தில் கடவுள் மீது தீவிர பற்றுக்கொண்டவராக இருந்த சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணனிடம் பழகிய பிறகு அவரது நட்பின் காரணமாக தீவிர பகுத்தறிவு சிந்தனையாளராக மாறினார். குறிப்பாக பெரியார் கொள்கைகளில் அதிக ஆர்வம் காட்டி அவரை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். பெரியார் படத்தில் பெரியார் கேரக்டரிலும் சத்யராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பல விஷயங்களை மனம் விட்டு பேசினார். அப்போது, நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், நானும் தாராளமாக இணைந்துக் கொள்வேன். அவர் பெரியாரை கொள்கை தலைவராக வைத்திருக்கிறார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
தவெக கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் நான் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய்தான், அதெல்லாம் கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார். பெரியாரின் கொள்கைகளை பரப்பும் பதவி எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் உண்மையில்தான் சொல்கிறாரா, அல்லது நக்கல் செய்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில் இவர் ஒரு திமுக விசுவாசியாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.





