இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் குறித்த கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. எனினும் என்கவுண்டர், கல்வி வியாபாரம் குறித்து இந்த படம் பேசுவதால், சமூக ஆர்வலர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல விமர்சனமே கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்டையன் படம் குறித்து தனது பதிவில் கூறியிருப்பதாவது, தம்பி ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலமாக அவர் சொல்ல வந்த கருத்தை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.அண்மையில் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களிலேயே வேட்டையன் படம் தான் தனித்துவத்துடன் மக்கள் மனதில் உயர்ந்த நிற்கும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது.
திரைக்கதை என்பது பொழுது போக்குவதற்கு மட்டுமல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கும் என்பதையும் தாண்டி நாம் வாழும் சமூகத்தில் பலரது உள்ளத்தின் பழுதை நீக்குவதற்கு என்பதை இந்த திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள். ஜெய்பீம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ஞானவேல் இந்த படத்தை இயக்க இயக்க உள்ளார் என்று அறிந்தபோதே சமூகத்திற்கு நல்ல கருத்தை போதிக்கும் திரைப்படமாக வேட்டையன் வெளிவரும் என்று நான் கூறினேன்.
நான் எதிர்பார்த்தது போலவே சமூக அக்கறை கொண்ட ஆகச் சிறந்த படமாக வேட்டையன் உள்ளது. நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டண கொள்ளை குறித்தும், பேக் என்கவுண்டர் குறித்தும் நீதியும் மனிதமும் ஒருசேரக் கொல்லப்படுவது குறித்தும், தொடர்ச்சியாக பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துக்களை திரையில் கண்டது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. இந்திய பெரும் நாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை கொண்டு ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலம்தான் சொல்ல நினைத்த கருத்தை மிக அழகாக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்.
சாமானியனுக்கும் சரியான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டப் போராளியாக வரும் இந்திய திரையுலகின் பெரும் ஆளுமை நடிகர் அமிதாப்பச்சன் கம்பீரமான கதாபாத்திரத்தின் மூலம் உயர்ந்திருக்கிறார். நறுக்கு தெறித்தது போன்ற திரைப்படத்தின் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது, சமூகத்தின் அவலத்தை சாடுகிறது.
தம்முடைய இயல்பான கலகலப்பான நடிப்பின் மூலம் பகத் பாசில் நம் நெஞ்சில் நிற்கிறார். சமூக கொடுமைகளை சட்டத்தின் முன் கொண்டு வர துடிக்கும் பெண்ணாக துஷாரா விஜயன் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லன் பாத்திரத்தில் ராணா டகுபதி நடிப்பால் மிரட்டி உள்ளார். மஞ்சுவாரியார், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, கிஷோர், ரக்சன் உள்ளிட்ட அனைவருமே மிகச்சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சிறப்பான படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். சமூக அக்கறை கொண்ட வேட்டையன் படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று சீமான் அதில் கூறியிருக்கிறார்.





