இயக்குநர் மற்றும் நடிகர் சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக கட்சியை நடத்தி வருகிறார். நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து, சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதுகுறித்த தனது கருத்துகளை சீமான் கூறினார்.
சீமான் கூறியதாவது, எதையும் தொடங்குவது என்பது எளிது, தொடர்வது என்பது ரொம்ப கடினம். தொடங்கும்போது இருக்கிற அந்த ஈடுபாடும் ஆர்வமும், தொடர்ந்து அது கடைசி வரை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். தொடர்ச்சியாக அதே ஆர்வத்தோடு, ஈடுபாடோடு நிற்க வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு நடிகர் தன் ரசிகர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கி வெற்றி பெறுவது என்பது சரித்திர புரட்சியாகும். பொதுவான மக்களையும் அங்கு தன் பக்கம் இழுக்க வேண்டும். அது எம்ஜிஆருக்கு இருந்தது. பொதுவான மக்களின் ஆதரவு எம்ஜிஆருக்கு இருந்தது. அதனால் அவர் வெற்றி பெற்றார்.
மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அவர்கள் மனதுக்கு நெருக்கமாக நாம் இறங்கிச் செல்ல வேண்டும். இது ஒருநாள் இரண்டு நாளில் நடந்து விடாது. நான்கு, ஐந்து ஆண்டுகள், ஏன் பத்து ஆண்டுகள் என மக்களிடையே பயணம் செய்துக்கொண்டே இருந்தால் தான் நெருங்க முடியும். அதை செய்யலாம். அதை தம்பி விஜய் செய்வாருன்னு நம்பறேன்.
மண்ணை ஆள வேண்டுமென்றால் முதலில் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். 2026ல் கூட்டணிக்கு தம்பி வந்தால் என்றால் தட்டிக் கொடுத்துதான் வா தம்பி என்று வரவேற்க வேண்டும். நாம் வேலை செய்யும்போது கூட ஒருவர் சேர்ந்து பணி செய்ய முன்வருவதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் அதை தம்பிதான் முடிவு செய்ய வேண்டும்.
நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன். அதனால் என்னை யாராலும் என்னை நீ தோற்கடிக்கவே முடியாது. நான் அவ்வளவு தோற்று இருக்கிறேன்.அதனால் தோல்வி குறித்த பயமே இல்லை எனக்கு என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் பதிலளித்தார்.





