தான் அறிமுகமான முறைமாமன் திரைப்படத்திலிருந்து தற்போது வரை கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் சுந்தர் சி. அவரது ஒவ்வொரு திரைப்படங்களும், திரையரங்குகளில் கொண்டாட்டக் களமாக மாற சுந்தர் சி-க்கு என தனி ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து கேங்கர்ஸ் திரைப்படத்தை கொடுத்தார். இதில் வடிவேலுடன் அவர் அளித்த காமெடி லூட்டி கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. சுந்தர் சி-யின் ஆரம்பகட்ட காலங்களில், அவருக்கு வெளிவந்த பல திரைப்படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடி வசூல் சாதனை படைத்தன. இதில் நவரச நாயகன் கார்த்திக் உடன் அவர் இணைந்து உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.
இதில் உள்ளத்தை அளித்தா திரைப்படம் இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது. குறிப்பாக கவுண்டமணியும் கார்த்திக்கும் இணைந்து அடிக்கும் லூட்டிகள், இப்போதும் அப்படியே ஃபிரஷ் ஆக இருக்கும். சிற்பி இசையில் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.
அந்த திரைப்படத்தில் தனது அடுக்கடுக்கான கவுன்ட்டர் வசனங்கள் மூலம் ரசிக்க வைத்திருப்பார் கவுண்டமணி. படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அவரது லொள்ளு காமெடிகள் வேற லெவலில் இருக்கும். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் முதலில் கார்த்திக்கு பதில், விஜய் தான் நடிக்க இருந்ததாக பேட்டி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், 1996 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தோம். அதற்கான பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வந்தன. படம் வெளியாக இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஜனவரி 8ஆம் தேதிதான் அழகிய லைலா பாடலை சூட்டிங் எடுக்கிறோம். அதற்கடுத்த இரண்டு நாளில் இன்னொரு பாடலின் சூட்டிங் நடைபெறுகிறது.
இப்படி வேலை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் முடிவாக இருந்த சூழலில், அதே நாளில் விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படமும் வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு 15 நாட்கள் தள்ளி வைத்தால் விஜய் நடிப்பார் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஒரு பத்து நாட்கள் கால்ஷீட் பிரச்சினையால், விஜய் நடிக்க முடியாமல் போக கார்த்திக் சார் படத்திற்குள் வந்தார் என தெரிவித்துள்ளார்.





