இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் செல்வராகவன். காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி மயக்கம் என்ன ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை இரண்டாம் உலகம் நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறினார்.
நடிகர் தனுஷை ஒரு சிறந்த நடிகராக உருவாக்கியவர் இயக்குனர் செல்வராகவன்தான். இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். அடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை 2ம் பாகமாக எடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் தனுஷ் கார்த்தி இருவரும் ஒரு வருடம் கால்ஷீட் தந்தால்தான் அது சாத்தியமாகும் என்றும் கூறியிருக்கிறார்.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக அசத்திக்கொண்டு இருக்கிறார். பீஸ்ட் மார்க் ஆண்டனி பகாசுரன் ராயன் என தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் செல்வராகவன் நடித்து வருகிறார். அதே போல் நடிகராக இருந்த தனுஷூம் இப்போது வரை 4 படங்களை டைரக்ட் செய்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, சின்ன வயசுல எங்கள் வீட்டில் வறுமை அதிகமாக இருந்தது. ஊர்ல இருந்து சென்னைக்கு எங்க அப்பா பிழைக்கதான் எங்களை கூட்டிட்டு வந்தார்.
அப்போது சாப்பிடுவதற்கு வீட்டில் சோறு கூட இருக்காது. அப்போ நானும் என் சிஸ்டர் மட்டும்தான் இருந்தோம். எங்க அம்மா பக்கத்து வீட்டுல போய், அப்பா வேலைக்கு போகணும். அதனால் டிரஸ்க்கு போட கஞ்சி குடுங்க என்று கேட்டு வாங்கிட்டு வந்து அதை எங்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. அப்படி வறுமையோட முழு உருவத்தையும் பார்த்து வந்தவங்க தான் நாங்க.
இதில் வறுமையை பார்க்காமல் வந்தவர் தனுஷ். அவர் பிறக்கும்போது ஓரளவு நாங்க செட்டில் ஆயிட்டோம். அதனால் நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் தம்பி தனுஷ் படவில்லை. நான் பார்த்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் அவர் வறுமையை பார்க்கவில்லை என்று அந்த நேர்காணலில் இயக்குனர் செல்வராகவன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





