பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வெற்றிமாறன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்களை எடுத்திருக்கிறார். அசுரனுக்கு பிறகு அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. கலைபுலி எஸ் தாணு இதனை தயாரிக்க இருந்தார்.
சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக இருந்தது. இதில் அமீர் மற்றும் சூரி ஆகியோர் நடிக்க இருந்தனர். ஆனால், அந்த நேரத்தில் சூர்யாவிடம் இருந்து கால் ஷீட் கிடைக்கவில்லை. படத்தில் சிஜி வேலைகளும் அதிகமாக இருந்தன.
இதன் காரணமாக, ஒரு சிறிய படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்து வெற்றி மாறன் கையில் எடுத்தது தான் விடுதலை. ஆனால் இயக்குனர் நினைத்தது போல் அந்த படம் அமையவில்லை. கதைக்குள் செல்ல செல்ல அதில் நிறைய விஷயங்கள் இருந்ததால், விடுதலையை ஆழமாக தோண்ட ஆரம்பித்தார் வெற்றிமாறன்.
முதலில் ஒன்றரை மாதத்திற்குள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பிறகு ஒன்றாம் பாகம் இரண்டாம் பாகம் என வளர்ந்து கொண்டே இருந்தது. இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ஹிட் அடித்தது. அடுத்த பாகத்தை இன்னும் இயக்கிக் கொண்டே இருக்கிறார் வெற்றிமாறன். கடைசியாக தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூட்டிங் நடைபெற்றது.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏராளமான நடிகர்களை அவர் புதிதாக இணைத்திருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இதுபோக எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சூர்யாவும், கங்குவா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இருவரும் வாடிவாசல் படத்தில் இணைவது உறுதியாகி இருக்கிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை முடித்துவிட்டு வாடிவாசலில் கவனம் செலுத்துகிறார் வெற்றிமாறன். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செட், சென்னை பூந்தமல்லி அருகே போடப்பட்டு வருகிறது. அங்கு இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இதன்பிறகு அக்டோபரில், வாடிவாசல் படத்தின் வேலைகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அறிந்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி வருகின்றனர்.





