கூலி திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, சத்யராஜ், சோபின் ஷாகிர், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2இல் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். முந்தைய பாகத்தை இயக்கிய நெல்சன் இதனை எடுத்து வருகிறார். ஜெயிலர் படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் மீது ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தாலும் இதன் வெற்றி இமாலய அளவில் இருந்தது.
கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். படத்தில், ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் கன்னட திரை உலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்டோரை இறக்கி இருந்தார் நெல்சன். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கச்சிதமான காட்சிகளையும் அவர் கொடுத்திருந்தார்.
இப்படியான சூழலில், ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் இந்த பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முந்தைய பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் இதிலும் இடம் பெற்றிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஜெயிலர் 2 திரைப்படத்திலான அனுபவம் குறித்து அண்மையில் யோகி பாபு பகிர்ந்து இருந்தார்.
இதே போல் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் படத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக கர்நாடக மாநிலம் மங்களூருவில், சூட்டிங் எடுக்க இருக்கிறார் நெல்சன்.
படத்தில் தெலுங்கில் இருந்து பாலையா நடிப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே முதல் பாகத்தில் அவரை நடிக்க வைக்க தனக்கு யோசனை இருந்ததாக ஒரு முறை கூறியிருந்தார் நெல்சன். இந்த முறை அவர் ஒரு கேமியோ ரோலில் வருவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கும் ஒரு சிறிய போர்ஷன் படத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன் நடித்திருந்தார். அதேபோல் கூலியில் அமீர்கான் நடித்திருப்பதும் உறுதியாகிவிட்டது. இதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான் வருவதாக பேசப்படும் தகவல்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





