இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு துவங்கப்பட்ட இந்த படம் பல காரணங்களால் மாதக்கணக்கில் தடைபட்டு தடைபட்டு பிறகு ஒருவழியாக எடுத்து முடிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண முக்கிய வேடத்திலும் நடித்திருக்கின்றனர்.
மெய்யழகன் படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்த எந்த படமும் 2025ம் ஆண்டில் ரிலீஸ் ஆகாத நிலையில் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் இருந்தனர். இந்நிலையில் வா வாத்தியார் படம் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் என்று படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியானதால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் பைனான்சியர் ஒருவர் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் 20 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று வா வாத்தியார் படக்குழு மீது வழக்கு தொடர்ந்து படத்திற்கு தடை கோரியதால் நீதிமன்ற உத்தரவுபடி இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் கடந்த 12ம் தேதி வா வாத்தியார் படம் ரிலீஸாகவில்லை.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்துக்கு பிறகு அவர் நடித்த கருப்பு படம் பல காரணங்களால் திரைக்கு வராமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கே திரைக்கு வரும் என எதிர்பார்த்த கருப்பு படம் வரும் பொங்கலுக்கு கூட வருமா என்பதில் சந்தேகமே நீடிக்கிறது. இது சூர்யா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது.
அண்ணன் சூர்யாவை போல தம்பி கார்த்தி நடித்த வா வாத்தியார் படமும் 2 ஆண்டுகளாக உருவான நிலையில் இப்போது ரிலீஸ் நேரத்தில் திடீரென கோர்ட் வழக்கில் சிக்கி தள்ளி வைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை மனச்சோர்வை தந்துள்ளது. இப்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது வருகிற டிசம்பர் 24ம் தேதி கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் ரிலீஸ் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. அன்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாள் என்பதால், எம்ஜிஆரை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படம் அன்று கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி பிறந்த நாளில் வர வேண்டிய படம் வா வாத்தியார் இப்போது எம்ஜிஆர் நினைவு நாளில் வரப்போகிறதா என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.





