இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. இது விஜய் சேதுபதி நடித்த 50வது படம். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, பிஎல் தேனப்பன், சிங்கம் புலி, நட்டி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாரதிராஜா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பிளாப் படங்களை தந்துவந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு இது கம்பேக் படமாக அமைந்தது. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில், மகாராஜா படம் திரையிடப்பட்டது. மலேசியாவில் மகாராஜா படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றிருக்கிறது.
மகாராஜா படத்தை இயக்குவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன் நித்திலன் சாமிநாதன் இயக்கிய படம் குரங்கு பொம்மை. இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் நாயகனாக விதார்த், பாரதிராஜா, பிஎல் தேனப்பன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மகாராஜா படம் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு மட்டுமின்றி, அந்த படத்தில் நடித்த அனைவருக்குமே பெரிய அளவில் ஒரு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக சிங்கம்புலியை அப்படி ஒரு கேரக்டரில் யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நட்டியின் அலட்டலான நடிப்பும், அனுராக் காஷ்யப்பின் மிரட்டலான நடிப்பும் படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.
இந்நிலையில் மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்தது டைரக்டர் மற்றும் நடிகர் கே பாக்யராஜின் மகன் சாந்தனு என்றும், இந்த படத்தில் நடிக்க, நித்திலன் கதை சொன்னதும் சாந்தனு ஓகே சொன்னதாகவும், ஆனால் வேண்டாம் என்று பாக்யராஜ், சாந்தனுவிடம் சொன்னதாகவும் ஒரு தகவல் பரவியது. இப்படி ஒரு சிறந்த படத்தில் சாந்தனுவை நடிக்க விடாமல் அவரது அப்பா பாக்யராஜே தடுத்துவிட்டாரா என்றும் பேசப்பட்டது.
இதுகுறித்து சாந்தனு வெளியிட்டுள்ள பதிவில், இந்த கதையை நான் கேட்டவுடன் ஓகே சொன்னேன். ஆனால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் அப்போது முன்வராததால், குரங்கு பொம்மை படத்தை டைரக்ட் செய்ய நித்திலன் சாமிநாதன் முயற்சித்தார். இந்த கதையை என்னிடம் நித்திலன் சொன்னது கூட அப்பாவுக்கு தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட வெற்றிக் கதையை நான் ஓகே சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது, எப்பவும் கண்டன்ட் தான் கிங் என்று நித்திலன் நிரூபித்து விட்டார், அவருக்கு என் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.





