நடிகர் அதர்வா நடிப்பில் உருவான இதயம் முரளி திரைப்படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு தமன் இசை தந்துள்ளார். இதயம் முரளி படத்தின் மையக்கரு முழுவதும் ஒருதலை காதலை சுற்றியே நகர்கிறது. இதயம் முரளி என்ற இளைஞராக அதர்வா நடித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் கீதா என்ற மாணவியை பார்த்தவுடன் அவர் காதலிக்கிறார். ஆனால் அவரது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.
சில சூழ்நிலைகளால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இருந்தாலும் சிறுவயதில் மனதில் பதிந்த காதலை இதயம் முரளியால் மறக்க முடியவில்லை. காலம் கடந்தும் அந்த காதல் அவருக்குள் உயிருடன் இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் வசித்து வரும் கீதாவை தேடிச் செல்ல முடிவு செய்கிறார். ஆனால் அந்த தேடல் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.
முரளியின் வாழ்க்கையில் மற்றொரு பெண்ணாக கயாடு லோஹர் நடித்துள்ள கதாபாத்திரம், கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நடிகர் ஃபகத் பாசில் ஏற்றுள்ள கேரக்டரும் கதையின் போக்கையே மாற்றும் வகையில் அமைந்துள்ளது. இறுதியில் முரளி தனது முதல் காதலியான கீதாவை சந்திக்கிறாரா? அல்லது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறாரா? என்பதுதான் இதயம் முரளி படத்தின் முக்கிய கதைகளமாக உள்ளது.
உணர்ச்சிகரமான காதல், வாழ்க்கை, பிரிவு மற்றும் மீண்டும் சந்திக்கும் தருணங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இதயம் முரளி படம் உருவாகியுள்ளது. இந்த படம் குறித்து நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஷ் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, இதயம் முரளி திரைப்படம் பழைய நினைவுகளை மீண்டும் மனதில் கொண்டு வரும் அழகான பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. படம் முடிந்த பிறகும் நீண்ட நேரம் மனதில் நிற்கும் இனிய நினைவுகளை இந்த திரைப்படம் ஏற்படுத்துகிறது.
இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் தனது முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகத்தை பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கவனிக்கப்படக்கூடிய இயக்குனராக அவர் உருவெடுத்துள்ளார். நடிகர் அதர்வா முழு திரைப்படத்தையும் தனது இயல்பான நடிப்பால் தாங்கி நிற்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிகவும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவாளர்கள் சாய் மற்றும் மனோஜ் பரமஹம்சா இருவரும் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
அதேபோல் இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை இந்த திரைப்படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்தும் வகையில் அவரது இசை அமைந்துள்ளது. இந்த மனதை தொடும் அழகான திரைப்படத்தை உருவாக்கிய படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என ஸ்ரேயாஷ் மனதார பாராட்டி இருக்கிறார்.





