தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போலவே மலையாள சினிமாத்துறையிலும் திரைப்பட கலைஞர்களுக்காக அம்மா சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் துவங்கியது முதல் கடந்த 31 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளாக ஆண் நடிகர்களே இருந்து வந்தனர்.
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த அம்மா சங்கத் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர். அம்மா சங்கத்தின் தலைவர் பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர். நடிகை ஸ்வேதா மேனன் அம்மா சங்கத்தின் தலைவராகவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
மேலும் ஸ்வேதாமேனன் தலைமையில் 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மா சங்கத்தின் நிர்வாகிகளாக பதவியேற்ற பத்தே மாதங்களில் அதன் தலைவராக இருந்த ஸ்வேதா மேனனும் அந்த அமைப்பின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து அந்த சங்கத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
அம்மா சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையை எடுத்து அந்த சங்கத்தின் தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 14 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து வெளியேறினர். இது மலையாள சினிமாத்துறையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து தனது வலைதள பக்கத்தில் நடிகை ஸ்வேதா மேனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதில் நடிகை ஸ்வேதா மேனன் கூறியிருப்பதாவது, பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றேன். என்னால் முடிந்த அளவுக்கு தலைவராக நேர்மையாக செயல்பட்டேன். முந்தைய நிர்வாக குழுவின் செயல்பாடுகளை விசாரிக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு நிர்வாகங்களின் கணக்குகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்ததால் கொள்கை உறுதியுள்ள ஒரு பெண்ணாக அம்மா சங்கத்திலிருந்து விலக முடிவு செய்தேன். அது பலவீனத்தால் எடுத்த முடிவு அல்ல; என் சுயமரியாதையால் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று நடிகை ஸ்வேதா மேனன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். மேலும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஸ்வேதா மேனன் விலகியது குறிப்பிடத்தக்கது.





