இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடித்த ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, அருவம், சித்தா உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். நடிகர் கமல் தனது குரு என்று அடிக்கடி கூறுபவர்.
நடிகர் சித்தார்த் நடித்த மிஸ் யூ என்ற படம் வருகிற 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் டைரக்சன் செய்திருக்கிறார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சித்தார்த்துடன் ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழிலும், தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியாகிறது.
மிஸ் யூ படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது மிஸ் யூ படம் வெளியாகும் நிலையில், அடுத்த வாரத்தில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாக உள்ளது, அதனால் உங்களது படம் அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து ஓடுமா என்று நிருபர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் கூறியதாவது, பட வெளியீடு என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் பெரிய படம்தான். ஒரு படத்தின் பட்ஜெட் அது பெரிய படமா அல்லது சிறிய படமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.
எனது படம் 2வது வாரத்தில் தியேட்டர்களில் நீடிக்க வேண்டும் என்றால் சில விஷயங்கள் நடக்க வேண்டும். எனது படம் நன்றாகவும் ரசிகர்களுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். வேறு ஒரு படம் பற்றி அவர்கள்தான் கவலைப்பட வேண்டும், நான் கவலைப்பட வேண்டியது இல்லை.
படம் நன்றாக இருந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்கள். ஒரு நல்ல படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்க முடியாது. சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அப்படி நடக்க வாய்ப்பில்லை, என்று கூறினார். அதாவது புஷ்பா 2 படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பு எனது படம் வெளியாகிறது. அந்த படத்தின் வருகை, எனது படத்தை பாதிக்காது என்று சித்தார்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





