தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், அதில் ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு நாம் தனி இடம் கொடுக்கலாம். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.
வழக்கமான ஒரு காதல் கதை தான் என்றாலும் அதில் பேண்டஸியை கொண்டு வந்து சுவாரசியமாக கதை கூறி நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தார் இயக்குனர். படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, ஓ மை கடவுளே திரைப்படத்தை பலரும் கொண்டாடினார்கள். இதில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் வந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது திரைப்படமாக, டிராகனை எடுத்திருக்கிறார் அஸ்வந்த் மாரிமுத்து. கோமாளி லவ் டுடே திரைப்படங்களை கொடுத்த, பிரதீப் ரங்கநாதன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகி ரோலில் வருகிறார். இது மட்டுமல்ல கௌதம் மேனன் மிஷ்கின் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், பொறியியல் கல்லூரி மாணவராக வந்து போயிருந்தார். ஆனால் அவர் கல்லூரியில் நிறைய அரியர்கள் வைத்திருப்பது போலவும், இருப்பினும் அவர் வாழ்க்கையில் முன்னேறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இதனைப் பார்த்து பலரும் இது டான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கிண்டலடித்தனர். ஆனால் இதனை இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மறுத்து இருந்தார். ட்ரெய்லரில் சில விஷயங்களை நாங்கள் காட்டவில்லை என்றும், எதற்காக நான் டிராகன் என பெயர் வைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும் என்றும் கூறியிருந்தார்.
படத்தில் சினேகா கேமியோ ரோலில் வரும் நிலையில், மற்றொரு மிகப்பெரிய நட்சத்திரமும் ஒரு சிறிய காட்சியில் வந்து போகிறாராம். இந்த நிலையில் டிராகன் திரைப்படம் குறித்து பதிவிட்டு இருக்கும் நடிகர் சிலம்பரசன், பிளாக்பஸ்டர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்து உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் இணையத்தில் இதனை பகிர்ந்து வருகின்றனர். டிராகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. அஸ்வந்த் மாரிமுத்துவின் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிலம்பரசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.





