தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என அழைக்கப்படுபவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர். அவரது மகன் சிம்பு என்கிற சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக தனது அப்பா படங்களில் நடித்து அப்போதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இப்போது ரசிகர்களால் எஸ்டிஆர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கடந்த 3ம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடிய சிம்பு, அந்த நாளில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 50வது படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51வது படம் என 3 படங்களில் சிம்பு நடிக்க உள்ளார்.
இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 50வது படத்தை சிம்புவே தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கிறார். இதற்காக அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனமும் துவங்கி இருக்கிறார். ஏற்கனவே டி ராஜேந்தர் தனது மகன் பெயரில்தான் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருந்தாலும் சிம்புவே இந்த முறை தயாரிப்பாளராக களத்தில் இறங்கி விட்டார்.
தமிழ் சினிமாவில் இப்போது பார்க்கிங் லப்பர் பந்து படங்களின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இளம் நடிகராக இருப்பவர் ஹரீஷ் கல்யாண். இப்போது அவர் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் அதுல்யா ரவி கருணாஸ் சாய்குமார் அனன்யா வினய் ராய் தங்கதுரை ரமேஷ் தீனா விவேக் பிரசன்னா என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தேர்ட் ஐ புரொடக்சன்ஸ் எஸ் பி புரடக்சன்ஸ் என 2 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ஏற்கனவே டீசல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி உள்ள படம் டீசல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பீர் சாங் என்ற பாடல் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது. இப்போது டீசல் படத்திலிருந்து அடுத்து 2வது பாடலான தில்லு பாரு ஆஜா என்கிற பாடல் வருகிற 18ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வருகிற 18ம் தேதி சிம்பு குரலில் வெளியாகும் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





