தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். தமிழ் சினிமா அஷ்டவதானி என்று புகழப்படும் நடிகர் டி ராஜேந்தரின் மூத்த மகன். அப்பாவை போலவே மகனும் கலைவாரிசு தான். நடிப்பில், இசையில், படம் தயாரிப்பதில், படம் இயக்குவதில், சிலம்பரசனும் ஒரு குட்டி டிஆர் ஆகத்தான் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் சினிமாவில் அவர் கடந்த பல ஆண்டுகளாக போதிய அக்கறையும் ஆர்வமும் காட்டாமல், பல படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாமல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடையாமல், இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறார் என்பதும் மறுப்பதற்கு இல்லை. எனினும் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிலம்பரசன் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இப்போது நடிப்பில் தீவிரம் காட்ட துவங்கியிருக்கிறார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் தக்லைப் என்ற படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இந்த படத்தில் கமலும் சிம்புவும் படம் முழுக்க வரும் அளவுக்கு இருவருக்கும் சமமான, சவாலான கேரக்டர் தந்து நடிக்க செய்து இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த படப்பிடிப்பில் முழுமையான ஈடுபாடு காட்டி படக்குழுவினரையே அசத்தியிருக்கிறார் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, மலையாளத்தில் வெளியான 2018 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் ரூ 50 கோடி சம்பளம் கேட்ட நிலையில், அதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சம்மதிக்கவில்லை.
இதனால் அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக சில தினங்களாக தகவல் பரவி வந்தது. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் கூலி, ஜெயிலர் 2 படங்களை முடித்து விட்டு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதனால் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுக்கு பதிலாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் பரவியது.
ஆனால் இப்போது இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதாகவும், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அவர்கள் சேர்ந்து நடிப்பது பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தக்லைப் படத்தில் கமலுடன் நடித்த சிலம்பரசன், அடுத்து ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படி ரஜினி, சிம்பு நடித்தால் அது வேற லெவல் சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





