தென்னிந்திய சினிமாவின் இசைக் குயிலாக வாழ்ந்த பாடகி எஸ் ஜானகி நேற்று 88 வயதில் மறைந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அவரைப் பற்றிய நினைவுகளை கூர்ந்து வருகிறார்கள். பாடகி எஸ் ஜானகி ஏகப்பட்ட விருதுகளை பெற்றவர்.
கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த பத்மபூஷன் விருதை வாங்க பாடகி எஸ் ஜானகி மறுத்துவிட்டார். அந்த விருதை நான் வாங்க மாட்டேன் என்பதில் உறுதியாகவும் இருந்தார். அதற்குப்பின் கேரளாவில் நடந்த ஒரு பிரஸ்மீட்டில் பத்மபூஷன் விருதை வாங்க மறுப்பதற்காக காரணத்தையும் எஸ்.ஜானகி வெளிப்படையாக தெரிவித்தார்.
அப்போது எஸ் ஜானகி கூறியதாவது, என் மீது ஒரு பிரியத்துடன் தான் மத்திய அரசு விருது தருகிறது. அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் 55 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். எத்தனையோ விதவிதமான பாடல்களை பாடி இருக்கிறேன். எத்தனையோ மொழிகளில் பாடியிருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் அவர்களது மண் சார்ந்த விதத்தில் நான் பாடுவதாக பாராட்டி இருக்கிறார்கள்.
மலையாளிகள் கூட சொல்வார்கள். மலையாளிகளை விடவும் நான் மலையாளத்தை நன்றாக உச்சரிக்கிறேன் என்று பாராட்டுவார்கள். அப்படி பாடிய எனக்கு எத்தனை பெரிய விருது தர வேண்டும்? பாரத ரத்னா விருது கொடுத்தால் தான் வாங்குவேன். இல்லையென்றால் எனக்கு எந்த விருது மீதும் ஆர்வமில்லை. விருதுகளுக்காக நான் பாடுவதில்லை. என் ரசிகர்ளுக்காக தானே நான் பாடுகிறேன்.
மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் பாரத ரத்னா கொடுக்கட்டும். இல்லை என்றால் ஒரு விருதும் எனக்கு தேவையில்லை. எனது ரசிகர்கள் மத்தியில் இருப்பதே எனக்கு பெரிய விருது. அதைவிட சிறந்த விருது எதுவும் இல்லை. பத்ம விருதுகளை நான் வாங்கப் போவதில்லை என்று பாடகி எஸ் ஜானகி அப்போது கூறி இருக்கிறார்
இந்தி மொழியில் அதிக பாடல்களை பாடியவர் லதா மங்கேஷ்கர். அவர் பாடிய 50 ஆயிரம் பாடல்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமான அளவில் தான் எஸ் ஜானகியும் பாடல்களை பாடி இருக்கிறார். எஸ் ஜானகி ஆசைப்பட்டது போல லதா மங்கேஷ்கரை போலவே அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கினால் மிகவும் கௌரவமாக இருக்கும். மத்திய அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எஸ் ஜானகி அம்மாவின் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.





